Published : 28 Jun 2021 03:09 PM
Last Updated : 28 Jun 2021 03:09 PM
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழக வாசலில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்குத் துணைவேந்தரும் நியமிக்கப்பட்டார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் வரையறுக்கப்பட்ட எல்லைகளாகும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் வரையறுக்கப்பட்ட எல்லைகளாகும். அனைத்துப் படிப்புகளையும், தேர்வுகளையும் நடத்துவது அந்தந்தப் பல்கலைக்கழகத்தின் உரிமையாகும்.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் தற்காலிகமான இடத்தில் இயங்கிவருகிறது. சட்டப்படி எந்தெந்தப் பல்கலைக்கழகத்திற்கு எல்லை வகுக்கப்பட்டுள்ளதோ அங்குதான் அதன் அதிகாரம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பல்கலைக்கழகத்திற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இப்பல்கலைக்கழகத்தை முடக்க சதி நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து விழுப்புரத்தில் பி.ஜி. எக்ஸ்டென்டஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சிதான் இப்பல்கலைக்கழகமாகும். தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் உயர் கல்வி படிக்க திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன?
இந்த மாவட்டங்களுக்கென தனிப் பல்கலைக்கழகம் இருக்கும்போது இந்த அறிவிப்பு எதற்காக? இப்பல்கலைக்கழகத்தைச் சிதைக்க, முடக்க உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் என்பவர் உத்தரவிட்டுள்ளார். இச்செயலைச் செய்வது இந்த அரசு அல்ல, உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன்தான்.
இந்த கார்த்திகேயனை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ஊழல் பெருச்சாளி என்றார். அவர் இந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் உயர் கல்வித்துறைச் செயலாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அம்மா உணவகம், அம்மா க்ளினிக் அடித்து நொறுக்கப்பட்டபோது கடந்த ஆட்சியின் திட்டங்கள் அப்படியே தொடரும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது உயர் கல்வித்துறைச் செயலாளர் இப்பல்கலைக்கழகத்தை முடக்க நினைக்கிறார். இதனை முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தைச் சேர்ந்தவர்.
இங்குள்ள துணைவேந்தருக்கு வாகனம் கூடக் கொடுக்கப்படவில்லை. பதிவாளரை நியமனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் உயர்கல்வி படிக்க இப்பல்கலைக்கழகத்திலேயே சேர்க்க அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இதை அரசின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். அவர்களுக்குத் தெரியாமல் இது நடந்திருந்தால் இதனைச் சீர் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனை அரசியலாக்க விரும்பவில்லை. இதன் மேல் நடவடிக்கை எடுக்கக் காலதாமதமானால், இது இப்படித்தான் தொடரும் என்றால் நாங்கள் மேல் நடவடிக்கை எடுத்துக் கொள்கிறோம்''.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT