Published : 28 Jun 2021 12:02 PM
Last Updated : 28 Jun 2021 12:02 PM
தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதி வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியை (HOPF) தேர்வு செய்ய மத்திய தேர்வாணையத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகக் காவல்துறையில் உயரிய பதவி, சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி. தீயணைப்புத் துறை, சிபிசிஐடி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல டிஜிபிக்கள் பதவியில் இருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி அல்லது காவல்துறை தலைமை இயக்குநர் பதவி முக்கியமானது. இதை ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் (HOPF) என்றும் அழைக்கிறார்கள்.
இந்தப் பதவிக்கு வரும் ஐபிஎஸ் அதிகாரியைத் தமிழக அரசு நேரடியாகத் தேர்வு செய்தாலும் அதற்கான பட்டியலை மத்திய அரசு தேர்வாணையத்துக்கு (யூபிஎஸ்சி) சமர்ப்பித்து அவர்கள் அளிக்கும் பட்டியலிலிருந்தே ஒருவரைத் தேர்வு செய்ய முடியும். இது உச்ச நீதிமன்ற உத்தரவு. அப்படித் தேர்வு செய்யப்படுபவர் அடுத்த 2 ஆண்டுகளுக்குக் கட்டாயம் பதவியில் இருப்பார் அல்லது அவரது ஓய்வுக் காலம் அதிகமாக இருந்தால் அதுவரை பதவியில் இருப்பார்.
‘இந்தப் பதவிக்காகச் சில தகுதிகளை யூபிஎஸ்சி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் வைத்துப் பரிசீலிக்கிறது. அதன்படி சர்ச்சைகள், வழக்கில் எதுவும் சிக்காத, வருமான வரி ஏய்ப்பு, சொத்துக் கணக்கை முறையாக வைத்துள்ள, 30 ஆண்டுகளுக்கும் மேல் காவல் பணியில் உள்ள பட்டியலைப் பரிசீலித்து அரசுக்கு அளிக்கும்.
அந்தப் பட்டியலில் இருந்து ஒருவரை அரசு தனக்கான சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும். ஜூன் 30ஆம் தேதி சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதியின் பணிக்காலம் முடிவடைவதால் புதிய டிஜிபியைத் தேர்வு செய்யும் பணியில் அரசு இறங்கியுள்ளது. இதன்படி அரசு ஆலோசித்து தகுதியான 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய தேர்வாணையத்திற்கு அளித்துள்ளது.
அதன்பின் புதிய டிஜிபிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலைத் தயாரிக்கும் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் இன்று நண்பகல் 12 மணி அளவில் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், தற்போதைய சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோர் நேற்றே டெல்லி சென்றுவிட்டனர்.
புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், சட்டம் - ஒழுங்கு டிஜிபி, மத்திய உள்துறையிலிருந்து அதன் செயலர் மற்றும் (யூபிஎஸ்சி) தேர்வாணைய அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் பட்டியலை வைத்து ஆலோசித்து அடுத்த சட்டம்-ஒழுங்கு டிஜிபிக்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும் பணி நடக்கும்.
கூட்டத்துக்குப் பின் அடுத்த சட்டம்- ஒழுங்கு டிஜிபிக்கான தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை தமிழக அரசுக்கு யூபிஎஸ்சி அனுப்பும். அதிலிருந்து ஒருவரைத் தமிழக அரசு நியமிக்கும். தற்போது தமிழகத்தில் 10 டிஜிபிக்கள் பணியில் உள்ளனர். இதில் ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கத்தில் உள்ளதால் அவர் தகுதியற்றவர் ஆகிறார்.
அயல் பணியில் இருக்கும் தமிழக கேடர் டிஜிபி மிதிலேஷ் குமார் ஜா அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். காவலர் சீருடைப் பணியாளர் தேர்வு டிஜிபி பிரதீப் வி.பிலிப் செப்டம்பரில் ஓய்வு பெறுகிறார். சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தப்பட்சம் 6 மாதம் பதவியில் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இருவரும் தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.
அடுத்து பட்டியலில் 7 அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் 1. ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, 2. மத்திய அயல் பணியில் உள்ள சஞ்சய் அரோரா, 3. தீயணைப்புத் துறை டிஜிபி கரன் சின்ஹா, 4. சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், 5. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, 6. சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், 7. டான்ஜெட்கோ டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி ஆகிய 7 பேர் போட்டியில் உள்ளனர்.
இவர்களில் தகுதியானவர்களை யூபிஎஸ்சி ஆலோசித்து அவர்கள் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பும். அந்தப் பட்டியலில் ஒருவருக்கே அடுத்த சட்டம்-ஒழுங்கு டிஜிபிக்கான வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் சைலேந்திரபாபு, ஷகில் அக்தர், கந்தசாமி, சுனில் குமார் சிங் ஆகியோரே போட்டியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சைலேந்திரபாபு, கந்தசாமி இருவருக்கும் அதிக வாய்ப்புள்ளதாகக் காவல்துறை வட்டாரத்தில் தகவல் ஓடுகிறது.
புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபி குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT