Published : 28 Jun 2021 03:14 AM
Last Updated : 28 Jun 2021 03:14 AM

124-வது ஆண்டு திருமண நாள் விழா கொண்டாட்டம்; கடையத்தில் பாரதியார்- செல்லம்மாள் சிலை: சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு உறுதி

கடையத்தில் நடைபெற்ற பாரதியார்-செல்லம்மாள் 124-வது ஆண்டு திருமண நாள் விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார். படம்: த.அசோக்குமார்

தென்காசி

கடையத்தில் பாரதியார்- செல்லம் மாள் சிலை அமைக்கப்படும் என, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் சேவாலயா அமைப்பு சார்பில் மகாகவி பாரதியார்- செல்லம்மாள் 124-வது ஆண்டு திருமண விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை வகித்து பேசும்போது, “பாரதியார், செல்லம்மாள் வாழ்ந்த தெருவில் சில நிர்வாக காரணங்களுக்காக அவர்களது சிலை அமைக்க பரிந்துரை செய்ய முடியாத நிலை இருந்தது. இதே பகுதியில் பக்கத்து தெருவில் நூலகம் அருகில் சிலை அமைக்க மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சேவாலயா நிறுவனத்துடன் கலந்து ஆலோசித்து அந்த இடத்தில் சிலை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார்.

அனுமதி மட்டும் தேவை

விழாவில் சேவாலயா நிறுவனர் முரளிதரன் வரவேற்று பேசும்போது, “பாரதியாரின் மனைவியின் ஊர் கடையம். இந்த ஊரில்தான் பாரதியார் திருமணம் நடந்தது. அந்த காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. அப்போது, பாரதி தனது மனைவி தோளில் கை போட்டு அக்ரஹார தெருவில் நடந்து சென்றார். அதனால் அவர் விலக்கி வைக்கப்பட்டார்.

பாரதியார், செல்லம்மாள் வாழ்ந்த தெருவில் பாரதியார்- செல்லம்மாளுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று, கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். கடையத்தில் பாரதி, செல்லம்மாள் நினைவுகளை எடுத்துக்கூறும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். சிலை, மணிமண்டபம், அருங்காட்சியகம் அமைக்க அரசு அனுமதி அளித்தால் போதும். எங்கள் முயற்சியில் அமைத்துக்கொள்கிறோம்” என்றார்.

அடுத்த ஆண்டுக்குள்...

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, “பாரதியார், செல்லம்மாள் வாழ்ந்த வீடு தற்போது அவரது குடும்பத்தினரிடம் இல்லை. தனியாரிடம் உள்ள அந்த வீட்டை வாங்கிக் கொடுக்க தயாராக இருப்பதாக சோகோ நிறுவனர் தர்வேம்பு கூறியுள்ளார். எல்லோரும் சமம், பெண் கல்வி முக்கியம், அனைத்து சமூகமும் படிக்க வேண்டும் என்று சொல்லி பெரியாருக்கு முந்தைய தலைவராக பாரதியார் முன்மாதிரியாக வாழ்ந்தார். பாரதி வாழ்ந்த தெருவிலேயே பாரதியார், செல்லம்மாள் சிலை அமைக்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பாரதி, செல்லம்மாளின் அடுத்த மணநாளுக்கு முன்பு கடையத்தில் சிலை அமைக்க நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

நிகழ்ச்சியில் எழும்பூர் தொகுதி எம்எல்ஏ பரந்தாமன், சோகோ நிறுவனர் தர்வேம்பு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி தலைவர் அனந்த ராமசேஷன், பள்ளி செயலாளர் பி.டி.சாமி, கடையம் ஒன்றிய திமுக செயலாளர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x