Last Updated : 27 Jun, 2021 05:32 PM

1  

Published : 27 Jun 2021 05:32 PM
Last Updated : 27 Jun 2021 05:32 PM

கோவை குளக்கரைகளில் கான்கிரீட் பணியால் சிதைக்கப்படும் பல்லுயிர் பெருக்கம்: சூழல் அமைப்புகள் ஆட்சியரிடம் மனு

கோவை பேரூர் அருகே உள்ள கங்கநாராயண சமுத்திரம் குளக்கரையை தோண்டி கான்கிரீட் தளம் அமைக்க குளத்துக்குள் நடைபெற்றுவரும் பணி.

கோவை

கோவை குளக்கரைகளில் நடைபெறும் கான்கிரீட் பணியால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால், திட்டத்தில் மாற்றம் செய்யக்கோரி சூழல் அமைப்புகள் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நொய்யல் ஆற்றை ரூ.230 கோடி மதிப்பில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ், கோவையில் 18 அணைக்கட்டுகள், 22 குளங்களைத் தூர்வாரி, சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கோவை குளங்களில் உள்ள இயற்கையான கரைக்கு பதில், கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தால் நீர்நிலைகளில் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படுவதாக 'இந்து தமிழ்' நாளிதழில் கடந்த 24-ம் தேதி விரிவான செய்தி வெளியானது.

இந்நிலையில், இந்த திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி, நீர்நிலைகள் சார்ந்து செயல்படும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, சிறுதுளி, ராக், கியூப், கௌசிகா நீர் கரங்கள் அமைப்பு, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் இன்று (ஜூன் 27) மனு அளித்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:

"பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் நொய்யல் புனரமைப்பு திட்டத்தின் பணிகளை மேற்கொள்ளும் குத்தகைதாரர்கள் எந்தவித புவியியல் ஆய்வும், கணக்கெடுப்பும் செய்யாமல் அவர்களின் வசதிக்காக திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.

அந்த பகுதிகளை அறிந்த பொறியாளர்களை நியமிக்காமல், மற்ற மாவட்ட பொறியாளர்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளதால், குறிப்பிட்ட நீர்நிலைகளின் முக்கியத்துவம், தன்மை அறியாமல் பணிகள் நடைபெறுகின்றன.

மேலும், நொய்யல் புனரமைப்பு திட்டம் மட்டுமின்றி, கோவை மாநகர குளங்களில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி பணிகளும், இதேபோல் சூழலை சிதைக்கும் வகையில் அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் குளங்களின் நீர் சேகரிப்பு பரப்பு குறைகிறது. குளங்களை அழகுப்படுத்துவதை விடுத்து, குளங்களுக்கு நீர் வரும், வெளியேறும் பகுதிகளை மேம்படுத்துதல், பாதிக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை சரி செய்தல் போன்ற புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தவிர, குளங்களின் கரையில் கான்கிரீட் அமைப்பதால், தாவரங்கள், நாணல், புதர்களில் கூடு கட்டி வாழும் பறவை இனங்கள், சிறிய பூச்சிகளின் வாழ்வியல் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் அதிக செலவும், அடுத்தடுத்த காலங்களில் பராமரிப்பு செலவுகளும் ஏற்படும்.

எனவே, இயற்கை முறையிலான கருங்கற்கள், செந்நிற களிமண் கற்கள் போன்றவற்றை பயன்படுத்தினால், குளங்களின் சூழலும், அதன் உயிரினங்களும் காப்பாற்றப்படும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறையினரை அழைத்துப்பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, சூழல் அமைப்பினரிடம் ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x