Published : 27 Jun 2021 03:39 PM
Last Updated : 27 Jun 2021 03:39 PM
தேர்தலில் ஓட்டு போட்டது போலவே தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளுங்கள் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ஏழை எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசின் நோக்கத்துக்கு இணங்க, ஓட்டல் ஆனந்தா இன்-ல் புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இன்று(ஜூன் 27) நடைபெற்றது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பெண் சலவைத் தொழிலாளர்களுக்கு புகையில்லா சலவைப்பெட்டிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘முந்தைய காலத்தில், நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்தை சாமானிய மக்களிடம் கொண்டு சென்றதில் ரோட்டரி சங்கத்துக்கு பெரும்பங்கு உண்டு.
அதுபோலவே, தற்போதைய கரோனா பெருந்தொற்றுச் சூழலில் கரோனா தடுப்பூசியையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ரோட்டரி சங்கம் பங்கு அதிகம் இருக்க வேண்டும். சங்க நிர்வாகிகள் களத்தில் இறங்கி மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் விழிப்புணர்வுடன் பங்காற்ற வேண்டும்.
பிரதமர் இலவச சமையல் எரிவாயு “உஜாலா“ திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, நம்முடைய தாய்மார்கள் சமையல் செய்யும்போது விறகு அடுப்பில் இருந்து வெளியாகும் புகை 300 சிகரெட்டுக்கு சமமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால்தான் இந்த இலவச கேஸ் திட்டத்தை அறிமுகம் செய்கிறேன் என்று கூறினார்.
இந்த புகையில்லா சலவைப் பெட்டியைப் பார்க்கும்போது தாய்மார்களின் நுரையீரலை பாதுகாக்கும் சாதனமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இதில் புகை இல்லை. அதனால் புகையால் ஏற்படும் நோய் பாதிப்புகள் ஏற்படாது. அதற்காக, இப்படி ஒரு பாதுகாப்பு சேவை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்கள் கையில் பொருளாதாரம் இருக்கும்போது அது வீட்டின் பொருளாதாரமாக, அந்த நாட்டின் பொருளாதாரமாக இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு செய்கின்ற உதவி ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற உதவும். ஒரு பெண்ணுக்கு உதவி செய்வது குடும்பத்துக்கு உதவி செய்வதைப் போல. ஆகவே பெண்களின் பொருளாதாரம் எப்போதும் மேம்படுகிறதோ அப்போது நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.
புதுச்சேரி கலாச்சார ஆன்மீக சூழல்களைக் கொண்டது. புதுச்சேரி பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. கரோனா தடுப்பூசி போட்டு கொள்வதிலும் இந்த மாநிலம் சாதனை படைக்க வேண்டும். நம்முடைய குடும்பத்தைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் பெண்கள் அனைவரும் ஊசி போட்டுக் கொள்ளுங்கள்.
தேர்தலில் ஓட்டு போட்டது போலவே தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளுங்கள். கரோனா நடைமுறைகளைப் பின்பற்றி அதனைக் ஒழிக்க நாம் இணைந்து செயல்படுவோம்.’’இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT