Published : 27 Jun 2021 02:32 PM
Last Updated : 27 Jun 2021 02:32 PM

கரோனா பரவலை பூஜ்ஜியமாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்: அமைச்சர் செந்தில்பாலாஜி

தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி.

கரூர்

மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்.

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்த பயன்படும் வாகனங்களின் தொடக்க நிகழ்வு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கொடியசைத்து வாகனங்களை தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஏமூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் கரோனா தொற்றை கட்க்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்று பரவலை பூஜ்ஜியமாக்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

குறிப்பாக, தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அனைவரும் நோய்த்தொற்றிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் 6,079 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களின் வீடுகளுக்கே வாகனங்களில் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கூட விடுபடாமல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசிகள் செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்றார்.

மக்கள் சபை

தொடர்ந்து வெங்கமேடு பெரியகுளத்துப்பாளையத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் முன்னிலை வகித்தார். மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில், "சட்டப்பேரவைத் தேர்தலில் நமது தேவையை செய்து தரும் அரசுக்கு வாக்களித்துள்ளனர். கரூர் மாநகராட்சியாக்கப்படும். கரூர் மாவட்டம் கைத்தறி, கொசுவலை உற்பத்தி, பேருந்து கூண்டு கட்டுதல் ஆகிய 3 பிரதான தொழில்களை உள்ளடக்கியுள்ளது.

2 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வழங்கப்படும். இன்று நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மனுக்கள் தவிர பிற மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும்" என்றார்.

கூட்டத்தில் பெறப்பட்ட 5 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 5 பேருக்கு உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்.

கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகள், 157 ஊராட்சிகள், 11 பேரூராட்சிகள், குளித்தலை நகராட்சி ஆகிய பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று அனைத்துப் பகுதிகளிலும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.

உடனடி தீர்வு காணப்படாத மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மக்கள் சபை வாரந்தோறும் நடத்தப்படும். மக்களிடம் மனுக்கள் பெற்று 30 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x