Published : 27 Jun 2021 12:12 PM
Last Updated : 27 Jun 2021 12:12 PM
வங்கிக் கணக்கை முடக்கி நோயாளியின் உயிரை பொதுத்துறை வங்கி பறித்துள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (53). விவசாயி. தென்னை, வெங்காயம், சோளம் உள்ளிட்டவற்றை சுமார் இரண்டரை ஏக்கரில் பயிட்டு, விவசாயம் செய்து வந்தார். மனைவி கவிதா. தம்பதிக்கு 2 மகள்கள். பள்ளியில் படித்து வருகின்றனர்.
கனகராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர். கனகராஜின் தந்தை ரெங்கசாமி. விவசாயத் தேவைக்காக, கேத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.75 ஆயிரம் விவசாயக் கடன் பெற்றிருந்தார். கனகராஜ் சாட்சி கையெழுத்திட்டிருந்தார்.
ரெங்கசாமி 2017-ம் ஆண்டில் உயிரிழந்தார். இதையடுத்து, தந்தை பெற்ற கடனை, திரும்பச் செலுத்துவதாக கனகராஜ் வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார். இந்த மாத ஆரம்பத்தில் கனகராஜ் சிறுநீரக சிகிச்சை தொடர்பாக, மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அதே வங்கியில் உள்ள தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கச் சென்றார்.
அப்போது, பணம் எடுக்க முடியாத வகையில், அவரது கணக்கு முடக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். முடக்கப்பட்ட கணக்கு விடுவிக்கப்படாத நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனகராஜ் நேற்று முன்தினம் (ஜூன் 25) உயிரிழந்தார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 27) தன் ட்விட்டர் பக்கத்தில், "திருப்பூர் மாவட்டம் குள்ளம்பாளையத்தில், தந்தை பெற்ற பயிர்க்கடனுக்காக, வங்கிக் கணக்கை பொதுத்துறை வங்கி முடக்கியதால், சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் கனகராஜ் என்ற ஏழை விவசாயி உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது!
கனகராஜின் மருத்துவச் செலவுகளுக்காக அவரது வங்கிக் கணக்கிலிருந்த 75,000 ரூபாயை எடுக்க அனுமதி கோரியும், அதை வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்தது மனிதநேயமற்ற செயலாகும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்!
விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைப்படி பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். உயிரிழந்த விவசாயி கனகராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
1. திருப்பூர் மாவட்டம் குள்ளம்பாளையத்தில், தந்தை பெற்ற பயிர்க்கடனுக்காக, வங்கிக் கணக்கை பொதுத்துறை வங்கி முடக்கியதால் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் கனகராஜ் என்ற ஏழை உழவர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது!#savefarmers
— Dr S RAMADOSS (@drramadoss) June 27, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT