Published : 08 Dec 2015 10:50 AM
Last Updated : 08 Dec 2015 10:50 AM

தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.20,000 கொடையளித்த சவக்கிடங்கு தொழிலாளி

வாடும் மக்களுக்கு உதவி செய்ய உள்ளம் இருந்தால் போதும் என்பதை நிரூபித்திருக்கிறார் மதுரை அரசு மருத்துவமனை ஊழியர் விஜயன்.

மதுரை ராஜாஜி அரசுப் பொது மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்கூடத்தில் உதவியாளராக பணி புரிபவர் யு.விஜயன் (58). 33 ஆண்டுகளாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மாத சம்பளம் ரூ.13,000. குறைந்த சம்பளம் பெறும் இவர் தனது மகளின் வேண்டுகோளுக்கு இணங்கி முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.20,000 அனுப்பியுள்ளார்.

விஜயனின் மகள் தேன்மொழி (26). கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்த தேன்மொழி அண்மையில்தான் நோயில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். தனது மகளுக்கான மருத்துவச் செலவையும் தனது சம்பளத்திலிருந்து மேற்கொள்ளும் விஜயன் இந்தச் சூழ்நிலையிலும் தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.20000 அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் 'தி இந்து'விடம் கூறும்போது, "தேன்மொழிக்கு முதல் குழந்தை பிறந்தவுடனேயே அவருக்கு கேன்சர் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனது சொற்ப சம்பளத்தை வைத்து என் மகளுக்கான சிகிச்சை செலவுகளை மேற்கொள்வது சற்று கடினமாகவே இருந்தது.

இருந்தாலும், என் மகள் கேன்சர் பாதிப்புக்குள்ளான நாள் முதலாக இன்று வரை என்னால் இயன்ற வரை சிறு சிறு தான தர்மங்களை செய்து வருகிறேன். இந்நிலையில்தான் அண்மையில் ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என தேன்மொழி கூறினார். சென்னை, கடலூர் வெள்ள பாதிப்புகளை தொலைக்காட்சியில் பார்த்து நாங்கள் மிகவும் வருந்தினோம். எனவே, என மகளின் ஆசையை நிறைவேற்றும்விதமாக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.20,000 அனுப்பியுள்ளேன்" என்றார்.

முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியனை ரூ.20,000 நிதியுடன் சந்தித்த விஜயன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். பின்னர் ஆட்சியரின் வழிகாட்டுதலின் படி முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.20,000 வரைவோலை எடுத்து அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x