Published : 26 Jun 2021 06:31 PM
Last Updated : 26 Jun 2021 06:31 PM
மூன்றாம் அலையின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் குழந்தைகளுடன் இருக்கின்ற மற்றும் தொடர்பு கொள்கின்ற அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் கிடைக்கும். மேலும், குழந்தைகளைத் தேவையில்லாமல் வெளியில் அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் முன்னாள் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்புக் கள அலுவலகமும், சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து இன்று, கோவிட்-19 தடுப்பூசியின் அவசியம் & கரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தயாராதல் என்ற காணொலிக் கருத்தரங்கை நடத்தியது. இந்தக் காணொலிக் கருத்தரங்கில் அங்கன்வாடி பணியாளர்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் கிராம மகளிர் என சுமார் 750 பேர் கலந்துகொண்டனர்.
இந்தக் காணொலிக் கருத்தரங்கில் தமிழக அரசின் முன்னாள் பொதுசுகாதார இயக்குநரும், கோவிட்-19 மாநிலப் பணிக்குழு உறுப்பினருமான குழந்தைசாமி பேசியதாவது:
“கரோனா மூன்றாம் அலை வந்தால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர். ஏனென்றால் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இப்போது நாம் தடுப்பூசி போடவில்லை. மூன்றாம் அலையில் கரோனா வைரஸானது தடுப்பூசி போடாதவர்களையே தொற்றும்.
எனவே, மூன்றாம் அலையின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் குழந்தையோடு இருக்கின்ற மற்றும் தொடர்பு கொள்கின்ற அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தையைச் சுற்றி பாதுகாப்பு வளையம் கிடைக்கும். மேலும், குழந்தைகளைத் தேவையில்லாமல் வெளியில் அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தாய்ப்பாலூட்டும் தாயும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் இரண்டு அலைகள் கட்டுப்பாட்டுக்கு வந்ததற்கு முக்கியக் காரணம் ஊரடங்குதான். மூன்றாம் அலை வராமல் தடுப்பதற்கும் வந்தால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே தீர்வாக இருக்கும்”.
இவ்வாறு குழந்தைசாமி பேசினார்.
சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை பேசுகையில், “கோவிட்-19 ஐப் பொறுத்து இதுதான் பிரச்சினை, இதுதான் தீர்வு என்று சொல்லிவிட முடியவில்லை. தினம்தோறும் புதுப்புதுச் சிக்கல்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இப்போது டெல்டா பிளஸ் பிரச்சினை எழுந்துள்ளது. இது மூன்றாம் அலைக்குக் காரணம் ஆகலாம் என்று கூறப்படுகின்றது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக் கூடாது. கரோனா வைரஸ் பெருந்தொற்று என்ற நிலையில் இருந்து சாதாரணத் தொற்று என்ற நிலைக்கு வரும் வரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மக்களிடம் மனமாற்றமும், நடத்தை மாற்றமும் ஏற்பட்டால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்” என்று பேசினார்.
சென்னை பெருநகர மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனுவாசன் பேசுகையில், “பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தொடர்ந்து கை கழுவும் பழக்கம் குறித்து ஏற்கெனவே சொல்லித்தந்தது தற்போது கரோனா தொற்றைத் தடுப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கிறது, மாணவர்களைச் சுகாதாரத் தூதுவர்களாகச் செயலாற்ற ஊக்குவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT