Published : 26 Jun 2021 04:15 PM
Last Updated : 26 Jun 2021 04:15 PM
தொடர்ந்து கட்சியை வளர்ப்பதன் மூலம் தான் முழு மெஜாரிட்டியுடன் பாஜகவின் தனித்த ஆட்சியை உருவாக்க முடியும் என புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவர் நமச்சிவாயம் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டம் நூறடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று(ஜூன் 26) நடைபெற்றது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அசோக்பாபு எம்எல்ஏ வரவேற்றார். மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா காணொலி கட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார்.
இதில் பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவர் நமச்சிவாயம் எம்எல்ஏ சிறப்புரை ஆற்றி பேசியதாவது:
‘‘கட்சியில் ஒரு சிலருக்கு பொறுப்புகள் கிடைத்திருக்கலாம். சிலருக்கு பொறுப்புகள் கிடைக்காமல் இருக்கலாம். இவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு கட்சிக்கு உழைக்க தயாராக இருக்கிறோம் என்று பெரிய மனதோடு நம்முடைய எம்எல்ஏக்கள் கட்சியின் முடிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக ஆட்சிக்கு வருமா? வராதா? என்ற காலத்தில் இருந்து நிறைய பேர் கட்சிக்காக உழைத்திருக்கிறார்கள். இதனை நான் எதிரணியில் இருந்து கவனித்துள்ளேன். இன்று எங்களோடு பலர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளார்கள். தொடர்ந்து ஒரே கட்சியில் கொள்கை பிடிப்போடு இருந்தவர்கள் எல்லாம், இன்று பாஜகவால் மட்டும்தான் மக்களுக்கு நல்ல திட்டத்தை கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து, பிரதமர், ஜே.பி.நட்டா மீது நம்பிக்கை வைத்து பாஜகவில் இணைந்து தேர்தலில் சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கும் உரிய முக்கியத்துவத்தையும், அங்கீகாரத்தையும் கொடுக்க வேண்டும்.
சீனியர், ஜூனியர், புதியவர், பழையவர் என்று இல்லாமல் அனைவரும் பாஜகவின் தொண்டர்கள் என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும். ஒரு காலத்தில் பாஜக கட்சி சட்டப்பேரவைக்கு வருமா? என்ற நிலை இருந்தது. ஆனால், இன்று 12 பேர் பாஜகவின் எம்எல்ஏக்களாக சட்டப்பேரவையை அலங்கரிக்க உள்ளோம். இந்த நேரத்தில் நாம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலையும், 5 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தலையும் சந்திக்க உள்ளோம்.
இன்று நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டோம். இத்துடன் எல்லாவற்றையும் விட்டு விடலாமா? என்று இருக்க முடியாது. தொடர்ந்து கட்சியை வளர்ப்பதன் மூலம்தான் மீண்டும் முழு மெஜாரிட்டியுடன் பாஜகவின் தனித்த ஆட்சியை உருவாக்க முடியும். அதுதான் பிரதமர், தேசிய தலைவர், உள்துறை அமைச்சரின் லட்சியம். அதுதான் நம்முடைய லட்சியமாகவும் இருக்க வேண்டும். புதிதாக கட்சியில் எவ்வளவு பேர் வந்தாலும், கட்சிக்காக காலம் காலமாக இருந்து உழைத்தவர்கள் சிறிய மனகசப்பில் ஒதுக்கி இருக்கலாம். நம்முடன் இருப்பவர்களை ஒருங்கிணைந்து கொண்டு செல்லவில்லை என்றால், புதிதாக எத்தனை பேரை கொண்டு வந்தாலும், பாஜகவை சிறப்பான கட்சியாக உருவாக்க முடியாது. எனவே, ஒதுங்கி இருப்பவர்களையும் அரவணைத்து கட்சியை ஒரு குடும்பமாக கொண்டு செல்லும்போதுதான் நம்முடைய இலக்கை அடைய முடியும்.’’என்றார்.
இதில் பாஜக எம்எல்ஏக்கள் சாய் ஜெ சரவணன்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், ராமலிங்கம், வெங்கடேசன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், புதுச்சேரி மக்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.3 ஆயிரம் அறிவித்து, முதல் தவணையாக அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ.1,500 வழங்கிய தேஜ கூட்டணி அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ‘‘டூல் கிட் என்ற மென்பொருளை பயன்படுத்தி கரோனா 2வது அலை விவகாரத்தில் மத்திய அரசை பற்றிய தவறான அவதூறு செயதிகளை மக்களிடம் பொய்யாக பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் இறுதி சடங்கின் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT