Published : 25 Jun 2021 06:38 PM
Last Updated : 25 Jun 2021 06:38 PM
தவறு செய்யும் வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வழக்கறிஞர் என்று சொல்வோரிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையைக் கேட்கும்படி காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் தமிழக அரசு இணைந்து ஜூன் 28-ம் தேதி, வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பார் கவுன்சில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
20,000 பேர் இந்த முகாம் மூலம் பயன்பெறுவர் என எதிர்பார்ப்பதாகவும், தொடர்ந்து, மாநிலம் முழுவதுமுள்ள மாவட்டத் தலைநகரங்களில் இந்தத் தடுப்பூசி முகாம் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும், திட்டத்தைத் தலைமை நீதிபதி தொடங்கிவைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
கரோனா 1 மற்றும் 2-வது அலையில் மட்டும் இதுவரை 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறிய அமல்ராஜ், வழக்கறிஞர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம், நீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணையைத் தொடங்க வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், 175 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் எனக் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், வழக்கறிஞர் அல்ல.
கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை போட்டவர்கள்தான் போலி வழக்கறிஞர்கள். கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை போட்டவர்களும், 5 ரூபாய்க்கு வழக்கறிஞர் ஸ்டிக்கர் வாங்கி ஒட்டிக் கொள்பவர்களும் வழக்கறிஞர்கள் அல்ல எனத் தெரிவித்தார்.
வழக்கறிஞர் என யார் கூறினாலும் அவரிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையைக் கேட்க வேண்டும் எனக் காவல்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளோம். தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையை அமைக்கவும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவரவும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தியதற்கு நன்றி எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே சென்னையில் இருந்த சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மீண்டும் சட்டக் கல்லூரி அமைக்க முதல்வரை வலியுறுத்துவதாகவும் அமல்ராஜ் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயனும், செயலாளர் ராஜாகுமாரும் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT