Last Updated : 25 Jun, 2021 06:17 PM

1  

Published : 25 Jun 2021 06:17 PM
Last Updated : 25 Jun 2021 06:17 PM

ஆட்சியர் இருக்கை எப்படி இருக்கும்?- கரோனாவால் தந்தையை இழந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய மதுரை ஆட்சியர்

மதுரை

தமிழகத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குதல், இலவசப் படிப்புக்கு ஏற்பாடு செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்கான விவரங்களைச் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே பெங்களூரு ஐ.டி. கம்பெனி ஊழியரான மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்த தனுஷ்தீபன் என்பவர் கரோனாவால் கடந்த 17-ம் தேதி மதுரையில் உயிரிழந்த நிலையில், அரசின் நிதியுதவிக்காக அவரது மனைவி சோனா தீபன் விண்ணப்பித்து இருந்தார். இதற்கான விண்ணப்பத்தை மதுரை குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா, சண்முகம் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இதற்காக சோனா தீபன் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது 9 வயது மகள் டீடா தீபனுடன் வந்திருந்தார்.

அப்போது டீடா தீபன், எதிர்காலத்தில் ஆட்சியராவேன் எனத் தனது தந்தையிடம் கூறியதை நினைத்து, ஆட்சியர் அலுவலகத்தை வியந்து பார்த்துள்ளார். தனது தாயாரிடம் ஆட்சியர் அலுவலகம், அவரது இருக்கை எப்படி இருக்கும், அதைப் பார்க்க ஆசையாக இருக்கிறது எனவும் கேட்டுள்ளார். இதை அருகில் இருந்து கவனித்த குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, சிறுமியின் ஆசையை நிறைவேற்ற முயற்சி எடுத்தார்.

இதைத் தொடர்ந்து அவர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷிடம் சிறுமியின் விருப்பம் பற்றித் தெரிவித்தார். அதற்கு ஆட்சியர் அனீஷ்சேகரும் சம்மதம் தெரிவித்து, சிறுமியை அவரது அறைக்கு வரவழைத்தார். அப்போது, ஆட்சியரிடம் அந்தச் சிறுமி 'நானும் ஆட்சியராகிப் பொதுமக்களுக்கு சேவை புரியவேண்டும்' என்ற ஆசையை ஆட்சியரிடம் கூறினார். ஆட்சியரும் சிறுமியை உற்சாகப்படுத்தும் விதமாக ''நன்றாகப் படித்து நீ மதுரைக்கே ஆட்சியராக வரவேண்டும். இந்த இருக்கையில் ஆட்சியராக நீ அமரும்போது, என்னைப் போன்றவர்கள் அனுமதி கேட்டு உள்ளே வரவேண்டும்'' எனச் சிறுமிக்கு ஊக்கமளித்தார்.

இதைக் கேட்டு சிறுமி மகிழ்ச்சி அடைந்தார். இதற்காக ஏற்பாடு செய்த பாண்டியராஜா உள்ளிட்டோருக்கும் சிறுமி நன்றியைத் தெரிவித்தார். இச்சம்பவம் அங்கிருந்தோரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்துப் பாண்டியராஜா கூறுகையில், ''கரோனாவால் உயிரிழந்த சிறுமியின் தந்தை எதிர்காலத்தில் 'நீ ஆட்சியராக வேண்டும்' என, மகளிடம் அடிக்கடி கூறியுள்ளார். அந்த ஆசையை நிறைவேற்றத் தந்தை இல்லாவிட்டாலும், அவரது கனவை நிறைவேற்ற ஆசைப்படும் சிறுமியின் விருப்பத்தை பூர்த்தி செய்தோம். இதுபற்றி ஆட்சியரிடம் கூறியபோது, அவரும் சிறுமியை உற்சாகப்படுத்தினார். இது சிறுமிக்கும், அவரது தாயாருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x