Last Updated : 25 Jun, 2021 05:12 PM

 

Published : 25 Jun 2021 05:12 PM
Last Updated : 25 Jun 2021 05:12 PM

கரோனா 3-வது அலையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்கினால் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தல்

ஆய்வுக் கூட்டத்தில் சரஸ்வதி ரங்கசாமி.

நாகர்கோவில்

கரோனா 3-வது அலையின்போது குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்கினால், அவற்றை அனைத்துப் பெற்றோரும் ஏற்றுக் குழந்தைகள் தடுப்பூசி போட்டுகொள்ள முன்வரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாவட்ட அளவிலான மறுசீராய்வு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் இன்று (ஜூன் 25) நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி துறைசார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில், "குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைக் குழந்தைகள் பாதுகாப்பு மாவட்டமாக உருவாக்க முடியும்.

குழந்தைகள் பிரச்சினைகள் மற்றும் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்பட்டால், மாவட்டக் குழந்தைகள் நலக்குழு மற்றும் காவல்துறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடக்கூடிய அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் குறித்த பயிற்சியினைத் துறை அலுவலர்களுக்கு மாவட்டக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

அத்துடன் அரசு, மற்றும் அரசு உதவி பெறும் தனியார் இல்லங்களில் உள்ள சிறார் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், கரோனா 3-வது அலை அதிக அளவில் குழந்தைகளைத் தாக்கும் என அச்சம் உள்ளதால், அங்கன்வாடி ஊழியர்கள், மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து வீடு வீடாகச் சென்று பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், 3-வது அலையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்கினால் அவற்றை அனைத்துப் பெற்றோர்களும் ஏற்று, தங்களது குழந்தைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குப் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த பாதுகாப்பு அல்லது பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கண்டறிந்து உரிய கள ஆய்வு மேற்கொண்டு அத்தகைய குழந்தைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்குதல், நிவாரணம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் 15 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தொழிலாளர் நலத்துறை அலுவலர்களிடம் விவரம் கேட்டறியப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 10 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலை குறித்தும், சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டால் வழங்கப்படும் தண்டனை குறித்தும் பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்" என்று சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ், மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x