Published : 25 Jun 2021 02:39 PM
Last Updated : 25 Jun 2021 02:39 PM

சிறுமிக்குத் தொடர் பாலியல் தொல்லை: சென்னை போலீஸ் எஸ்.ஐ. போக்சோ சட்டத்தில் கைது; உடந்தையாக இருந்த தாயும், பெரியம்மாவும் சிக்கினர்

சென்னை

சென்னை காவல் ஆணையரிடம் சிறப்பாகச் செயல்பட்டதாக பரிசுபெற்ற போலீஸ் எஸ்.ஐ., தனது தோழியின் மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த தாயும், பெரியம்மாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, காசிமேடு காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாகப் பணியாற்றுபவர் சதீஷ்குமார். கடந்த ஆண்டு சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள அருள் நகர் நியாயவிலைக் கடையில் கரோனா பாதுகாப்புப் பணிக்காகச் சென்ற எஸ்.ஐ. சதீஷ்குமாருக்கும், அங்கு பணிபுரிந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் திருமணமாகியிருந்த நிலையில், காலப்போக்கில் அவர்களது தொடர்பு மேலும் வலுத்து நெருக்கமானது. இருவரும் ஒருவருட காலமாக தனிமையில் சந்தித்துப் பழகி வந்துள்ளனர். சதீஷ்குமாரின் தோழிக்கு 15 வயதில் மகள் உள்ளார். ஒருநாள் இருவரும் தனிமையில் இருந்ததைச் சிறுமி பார்த்துவிட இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்பாவிடம் சொல்கிறேன் எனச் சிறுமி கிளம்ப, எஸ்.ஐ. சதீஷ்குமார் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதைப் பற்றி உன் அப்பாவிடம் நீ சொன்னால், உன் அப்பாவையும், உன் தம்பியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

துப்பாக்கியை முதன்முதலில் முகத்துக்கு நேரே பார்க்கும் 15 வயதுச் சிறுமி என்ன செய்வது என்று தெரியாமல் வெகுவாக பயந்துபோய் எதையும் சொல்லமாட்டேன் சார் என்று சொல்லியுள்ளார். எஸ்.ஐ. துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டதால் அதன் பின்னர் எஸ்.ஐ. தைரியமாக வீட்டுக்கு வருவதும், தாயாருடன் பழகுவதையும் பார்த்தும் பயத்தில் எதையுமே தன் அப்பாவிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார் சிறுமி.

குடும்ப நண்பர் என்பதுபோல் கணவரிடம் சொல்லி எஸ்.ஐ. வீட்டுக்கு வருவதைச் சந்தேகப்படாமல் இருக்க நாடகமாடியுள்ளார் சிறுமியின் தாய். அதிலிருந்து எஸ்.ஐ. சதீஷ்குமார் வீட்டிற்கு வருவதும் போவதும் அதிகரித்துள்ளது. கணவர் வந்தாலும் நண்பர்தானே என்று அனுமதித்துள்ளார். ஒரு கட்டத்தில் 15 வயதுச் சிறுமியின் பக்கம் சதீஷ்குமாரின் பார்வை திரும்பியுள்ளது.

உனக்கு இப்போது இருக்கும் வசதியைவிட இன்னும் அதிகப்படுத்தித் தருகிறேன், வீடு, கார் சொத்து என வாங்கலாம் என ஆசை காட்டியுள்ளார். ஆனால், நீ எனக்கு ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று கேட்டு, உன் மகளை எனக்குப் பிடித்துள்ளது. உன் மகளின் அனைத்துத் தேவைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சரி என்று சொன்னால் மட்டும் போதும் என்று சம்மதிக்க வைத்துள்ளார்.

பணம், நகை, வசதி என்றவுடன் தாய் என்பதையும் மறந்து சிறுமியின் தாயும் சம்மதம் தெரிவித்துள்ளார். அம்மாவின் சம்மதம் கிடைத்த தைரியத்தில் சிறுமியிடம் அவ்வப்போது அத்துமீறியுள்ளார் சதீஷ்குமார். அக்கம் பக்கத்தில் சதீஷ்குமாரின் வருகை குறித்து அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட தந்தை மனைவியை அழைத்து, எஸ்.ஐ. வருவதைக் குறைத்துக்கொள்ளச் சொல்லிக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பிறந்த நாள் வர, எஸ்.ஐ. சதீஷ்குமார் அன்று இரவு 12 மணிக்கு கேக் வாங்கிவந்து சிறுமியை கேக் வெட்டச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதுபோன்ற வழக்கம் எல்லாம் எங்கள் குடும்பத்தில் இல்லை. தேவையில்லாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம். நீங்கள் யார் திடீரென ஒரு வருஷமாக வீட்டுக்கு வருகிறீர்கள். சரி ஏதோ வருகிறீர்கள் என மரியாதைக்கு விட்டால் வரம்பு மீறுகிறீர்களே. பெண் பிள்ளை இருக்கும் இடத்தில் இதுபோன்று இரவு நேரத்தில் வரக் கூடாது எனச் சிறுமியின் தந்தை எஸ்.ஐ சதீஷ்குமாரைக் கடுமையாகக் கண்டித்து அனுப்பியுள்ளார்.

ஆனால், சதீஷ்குமாருக்கு அவமானங்கள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. சிறுமியிடம் தொடர்பு வைத்துக்கொள்வதற்காக அடுத்த மாதமே சிறுமிக்கு ஒரு பரிசு கொடுப்பதாகக் கூறி விலை உயர்ந்த ஐபோனை வாங்கிக் கொடுத்துள்ளார். அதை சிறுமி வாங்க மறுத்துள்ளார். அதைக் கண்டித்த சிறுமின் தாய், செல்போனைத் தான் வாங்கிவைத்துக்கொண்டு நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்க போங்க என்று சொல்லி சதீஷை அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்னர் சிறுமியைத் தனியாக வெளியே அழைத்துச் செல்ல சதீஷ்குமார் அவரது தாயாரிடம் கேட்க, அவரும், அவரது அக்காவும் சிறுமியை எஸ்.ஐ.யுடன் போகச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். போக மறுத்த சிறுமி தன்னுடைய அப்பாவிடம் நடந்ததை முழுதுமாக அழுதபடி தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை, தனது மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே மனைவியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். எஸ்.ஐ. பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போகிறேன் என்று தந்தை கிளம்பியுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தால், நீயும், உன் மகளும், மகனும் உயிரோடு இருக்கமாட்டீர்கள். விஷயத்தை இத்தோடு விட்டுவிடு என துப்பாக்கியைக் காட்டி எஸ்.ஐ. மிரட்டியுள்ளார். குழந்தைகளையும், தன்னையும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் போலீஸில் புகார் அளிக்காமல் தந்தை விட்டுவிட்டார்.

இதனால் தைரியமடைந்த சதீஷ்குமார், சிறுமியின் தாயின் உதவியுடன் சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியை மீண்டும் மீண்டும் பாலியல் உறவுக்கு இணங்க வற்புறுத்தியுள்ளனர். இணங்க மறுத்ததால் ஆத்திரத்தில் உன்னைக் கொலை செய்து விடுவேன் எனத் துப்பாக்கியைச் சிறுமியின் நெற்றியில் வைத்து மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி தந்தையிடம் அழுதபடி நடந்ததைக் கூறியுள்ளார்.

தொடர்ந்து வரும் தொல்லையால் இனியும் பொறுக்கமுடியாது என்கிற நிலையில் நம்மைக் கொன்றால் கொல்லட்டும் என்று சிறுமியின் தந்தை, மகளுடன் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடந்ததைக் கூறி புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன போலீஸார், உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சிறுமிக்கு நடந்த கொடுமைகள் அனைத்தும் உண்மை, எஸ்.ஐ. சதீஷ்குமார் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டம் போட்டது உண்மை எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து எஸ்.ஐ. சதீஷ்குமாரை மாதவரம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா இருவரையும் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான எஸ்.ஐ. சதீஷ்குமார் தற்போது காசிமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாதவரம் துணை ஆணையர் தனிப்படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். தனிப்படையில் இருந்தபோது சினிமா பாணியில் குற்றவாளிகளிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது சதீஷ்குமாரின் வாடிக்கையாம். 2019ஆம் ஆண்டு சிறப்பாகப் பணியாற்றியதாக அப்போதைய காவல் ஆணையரிடம் பரிசும் பெற்றுள்ளார் சதீஷ்குமார்.

வேலியே பயிரை மேய்வதுபோன்று குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடத்தில் உள்ள எஸ்.ஐ. வரம்பு மீறி கைதானது கண்ணியம்மிக்க போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x