Published : 25 Jun 2021 01:55 PM
Last Updated : 25 Jun 2021 01:55 PM
தமிழகத்தில் சுமார் 150 பேர் கரும்பூஞ்சையால் உயிரிழந்துள்ளதாக, வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரும்பூஞ்சை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு இன்று (ஜூன் 25) முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சென்னை, தலைமைச் செயலகத்தில் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இதையடுத்து, வல்லுநர் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, வல்லுநர் குழுவைச் சேர்ந்த மருத்துவர் மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரும்பூஞ்சை அறிகுறிகள் குறித்து அனைத்து மருத்துவமனைகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பும்போதும் இத்தகைய அறிகுறிகள் குறித்து அறிவுறுத்தப்படுகின்றது.
இப்போது நிலைமை சீரடைந்துள்ளது. ஏப்ரல் மாதக் கடைசியில் வந்த நோயாளிகள் அனைவரும் நோய் தீவிரமடைந்து மருத்துவமனைக்கு வந்தனர். இப்போது, ஆரம்பக் கட்டத்திலேயே நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நன்றாக இருக்கிறது. அதனால், இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. விரைவில் நோயைக் கண்டுபிடித்தல், மருத்துவக் குழுவாக வேலை செய்தல், மருந்துகளை விரைவில் கொடுத்தல் இவை மூன்றும் இறப்பைக் குறைத்துள்ளது.
இதில், பல மாநிலங்களில் குறைபாடுகள் இருந்தன. தமிழக அரசு இதனை வித்தியாசமாக அணுகியது. பழைய மருந்து, புதிய மருந்தைச் சேர்த்து குணப்படுத்துவதை சரியாகச் செய்ததாலேயே, இறப்பைக் குறைக்க முடிந்தது.
கரும்பூஞ்சை உருமாற்றம் அடையாது. அவ்வளவு வேகமாக மாறாது. அடுத்த கரோனா அலை வந்தால் கரும்பூஞ்சையும் வரலாம். அப்படி வந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும்.
இனி அரசிடம் இறுதி அறிக்கை மட்டுமே தாக்கல் செய்வோம். அரசு எடுத்த முயற்சிகளால் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதே இடைக்கால அறிக்கையில் உள்ளது. அந்த முயற்சிகள் பலன் கொடுத்துள்ளன என்பதே அந்த அறிக்கையில் உள்ளது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 150 பேர் கரும்பூஞ்சையால் உயிரிழந்துள்ளனர். இது, 6% தான். 2,700 பேர்தான் தமிழகத்தில் மொத்த கரும்பூஞ்சை நோயாளிகள். இறப்பு விகிதம் குஜராத்தில் 38%, ராஜஸ்தானில் 35%, கர்நாடகாவில் 8% ஆக உள்ளது.
கரும்பூஞ்சையால் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், அதில் பலரும் நீரிழிவு நோய் உள்ளவர்கள், புதிதாக நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
புதிய டெல்டா வைரஸால் கரும்பூஞ்சை அதிகமாகியுள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் கரும்பூஞ்சை அதிகம். கரோனாவுக்கு முன்பே 70% கரும்பூஞ்சை அதிகம். கரோனா வந்தபின் இது அதிகமாகிவிட்டது.
தமிழகத்தில் கரும்பூஞ்சை 27 மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. 10 மாவட்டங்களில் இல்லை. சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோவை, சேலம், திருச்சியில் அதிகமாக உள்ளது. திருவள்ளூர், விருதுநகர், கள்ளக்குறிச்சியில் இல்லை".
இவ்வாறு மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT