Published : 25 Jun 2021 01:14 PM
Last Updated : 25 Jun 2021 01:14 PM

சசிகலா சகோதரர் திவாகரனுக்கு கரோனா பாதிப்பு: சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசியலில் 31 ஆண்டுகாலம் ஜெயலலிதாவுடன் பயணித்தவர் சசிகலா. சசிகலாவின் உறவினர்களில் முக்கியமானவர்கள் தமிழக அரசியலில் செல்வாக்கு செலுத்தினர். டிடிவி தினகரன், திவாகரன், சுதாகரன், பாஸ்கரன், இளவரசி, ஜெய் ஆனந்த் எனப் பலரும் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்தினர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில், அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில் டிடிவி தினகரன், திவாகரன், விவேக் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டனர். திவாகரன் மன்னார்குடியில் வசித்து வருகிறார். டிடிவி தினகரன் அமமுகவைத் தொடங்கினார். டிடிவி தினகரனுக்கும் திவாகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவரைக் கடுமையாக விமர்சித்து வந்த அவர், அண்ணா திராவிடர் கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்து நடத்திவந்தார்.

இந்நிலையில் மன்னார்குடியில் வசித்து வந்த திவாகரனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகப்பட்டதால் மன்னார்குடியில் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு நேற்று முன்தினம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் நேற்று காலை கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடிவெடுத்து மன்னார்குடியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருக்கும் திவாகரன் உடல்நிலை குறித்து சசிகலா விசாரித்ததாகவும், கரோனா தொற்று என்பதால் நேரில் சென்று பார்ப்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை பெற்றுச் செல்வார் என்றும் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x