Published : 25 Jun 2021 11:30 AM
Last Updated : 25 Jun 2021 11:30 AM

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம்; வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் உதவி திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை

தமிழகத்தில் தடுப்பூசி சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டிடத் தொழிலாளர் நலவாரியத் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலைப் பரவலைத் தடுக்கும் முயற்சியில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் என்பதால் அரசு அதில் வேகம் காட்டி வருகிறது. பல்வேறு வகைகளில் தடுப்பூசி செலுத்தும் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டுசெல்லும் வகைகளில் முகாம்களை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமை சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலையின்றி வாடும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''கரோனா பெருந்தொற்றிலிருந்து கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடும் சீரிய நோக்கத்துடன் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற 13 லட்சத்து 41 ஆயிரத்து 494 தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இணங்க, முதற்கட்டமாக 2 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியினையும், கரோனா பெருந்தொற்று பரவக் காரணமாக பணி வாய்ப்பை இழந்த குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் பசியால் வாடக் கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு 1 லட்சத்து 29 ஆயிரத்து 446 தொழிலாளர்களுக்கு 6 கோடியே 61 லட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் மதிப்பீட்டில் 15 கிலோ அரிசி 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் இன்று நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறைச் செயலர் கிருஷ்குமார், தொழிலாளர் துறை ஆணையர் வள்ளலார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x