Published : 25 Jun 2021 08:50 AM
Last Updated : 25 Jun 2021 08:50 AM
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு, மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று (ஜூன் 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"மாநகராட்சியின் சார்பில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு 23.06.2021 மற்றும் 24.06.2021 ஆகிய இரு நாட்களுக்கு மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த இரண்டு நாட்களில் 8,880 நபர்கள் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி பயனடைந்துள்ளனர்.
தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு, மேலும் இரண்டு நாட்களுக்கு இன்றும் (ஜூன் 25), நாளையும் (ஜூன் 26) நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களை கடந்த நபர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களுக்கு சென்று இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT