Published : 24 Jun 2021 08:25 PM
Last Updated : 24 Jun 2021 08:25 PM
திருப்பத்தூர் மாவட்டத்தின் 6 ஒன்றியங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 454 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கரோனா தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனர் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியது.
ஆலங்காயம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி நியூடவுன் ஆரம்ப சுகாதார நிலையம், ஜோலார்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கெஜல்நாயக்கன்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம் தொடங்கியது.
இதுதவிர மாற்றுத்திறனாளிகள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கே சுகாதாரத் துறையினர் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தினர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலையில் இதுவரை 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கரோனா பாதிப்பு பெரும் அளவில் குறைந்துள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். முழு ஊரடங்கு, அதைத் தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் தொற்று பாதிப்பு எதிர்பார்த்த அளவுக்குக் குறைந்துள்ளது.
இருந்தாலும், பொதுமக்களிடம் மேலும் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். ஒரு சில இடங்களில் பொதுமக்கள் கட்டுப்பாட்டை மீறி நடமாடி வருகின்றனர். இதையும் கட்டுப்படுத்தினால் தொற்று பாதிப்பு மேலும் குறையும். அதேபோல, தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 6 ஒன்றியங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆலங்காயம் ஒன்றியத்தில் 124 மாற்றுத்திறனாளிகள், திருப்பத்தூர் ஒன்றியத்தில் 70 மாற்றுத்திறனாளிகள், கந்திலி ஒன்றியத்தில் 45 மாற்றுத்திறனாளிகள், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 48 மாற்றுத்திறனாளிகள், நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் 77 மாற்றுத்திறனாளிகள், மாதனூர் ஒன்றியத்தில் 89 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 454 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், ஆலங்காயம் ஒன்றியத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அதிக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். முகாமிற்கு வர முடியாதவர்கள் அருகேயுள்ள சுகாதார நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தால் சுகாதாரத் துறையினர் வீடு தேடிவந்து தடுப்பூசியைச் செலுத்துவார்கள்.
ஒட்டுமொத்தமாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் முதல் தவணை தடுப்பூசிகள் 5,014 நபர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசிகள் 651 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் போதிய அளவுக்குக் கையிருப்பு உள்ளதால் தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT