Last Updated : 24 Jun, 2021 06:32 PM

2  

Published : 24 Jun 2021 06:32 PM
Last Updated : 24 Jun 2021 06:32 PM

அதிகாரிகளே முடிவெடுக்கலாம்; மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய நீதிமன்றம் செல்லத் தேவையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

மோசடி பத்திரப் பதிவு உறுதியானால் அதை வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட பதிவுத்துறை ஆவணங்களில் குறிப்பிட வேண்டும். தேவையில்லாமல் உரிமையியல் நீதிமன்றம் செல்லுமாறு கூறக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலைச் சேர்ந்த பக்ரிராஜன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’கொடைக்கானலில் உள்ள எனக்குச் சொந்தமான எஸ்டேட், தீபா என்பவருக்குச் சொந்தமானது என கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2017-ல் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவை ரத்துசெய்யக் கோரி மாவட்டப் பதிவாளரிடமும், பின்னர் பதிவுத்துறை டிஐஜியிடமும் மனு அளித்தேன்.

பதிவுத்துறை டிஐஜி விசாரணை நடத்தி மோசடி பத்திரப் பதிவு நடைபெற்றிருப்பதாக அறிவித்தார். இருப்பினும் அந்தப் பத்திரத்தை ரத்து செய்யத் தனக்கு அதிகாரம் இல்லை என்றும், அதற்காக உரிமையியல் நீதிமன்றத்துக்குச் செல்லவும் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்யவும், வில்லங்கச் சான்றிதழில் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஆர்.கண்ணன் வாதிடுகையில், ’’மோசடி பத்திரப் பதிவு நடைபெற்றிருப்பதாக டிஐஜி அறிவித்துள்ளார். அவரது உத்தரவே இறுதியானது. இதனால் தீபா பெயரில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ’’மோசடி பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தீபா பெயரில் நடைபெற்ற பத்திரப் பதிவு மோசடியானது என அறிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமை மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்குப் பிரச்சினை இல்லை’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

’’பதிவுத்துறை சட்டத்தில் பத்திரப் பதிவு மோசடி குறித்து விசாரிக்க, பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பதிவுத்துறை அதிகாரி விசாரித்து மோசடி பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளது என உத்தரவிட்டால், அந்த உத்தரவே இறுதியானது. அந்த உத்தரவு பதிவுத்துறை ஆவணங்களிலும், வில்லங்கச் சான்றிதழிலும் பிரதிபலிக்க வேண்டும்.

பத்திரப் பதிவில் மோசடி நடைபெற்றிருப்பதாக உத்தரவிடும் அதிகாரி, அந்த மோசடிப் பதிவின் ஆவணங்களை ரத்து செய்ய உரிமையியல் நீதிமன்றம் செல்லுமாறு உத்தரவிடுவதை ஏற்க முடியாது. பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கையில் மோசடி பத்திரப் பதிவு நடைபெற்றிருப்பது உறுதியானால், அதை ஆவணங்களில் குறிப்பிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையால் சொத்தின் உண்மையான உரிமையாளர், தேவையில்லாமல் உரிமையியல் நீதிமன்றக் கதவுகளைத் தட்டாமல் இருக்கச் செய்ய முடியும். இந்த நடைமுறையைப் பதிவுத்துறை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அனைத்து சார் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த வழக்கில் பதிவுத்துறை டிஐஜியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2 வாரத்தில் மோசடி பத்திரப் பதிவு ஆவணங்களை ரத்து செய்து, வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிட வேண்டும்’’.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x