Published : 24 Jun 2021 06:05 PM
Last Updated : 24 Jun 2021 06:05 PM

வேலூர் மார்க்கெட்டுகளில் நடத்திய திடீர் சோதனையில் ஆபத்தான வடமாநில சிரஞ்சி சாக்லெட்டுகள் பறிமுதல்: மொத்த வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

வேலூர் காகிதப் பட்டறையில் பெட்டிக் கடை ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட சிரஞ்சி வகை சாக்லெட்டுகள்.

வேலூர்

வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டு வேலூரில் விற்பனை செய்யப்பட்ட ஆபத்தான சிரஞ்சி வகை சாக்லெட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் சோதனை செய்து பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி பகுதியில் உள்ள கடைகளில் சிரஞ்சிகளில் அடைக்கப்பட்ட சாக்லெட் விற்பனை நடைபெறுவதாகத் தகவல் வெளியானது. மேலும், மருத்துவமனைக் கழிவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சிரஞ்சிகளைப் பயன்படுத்தி சாக்லெட் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

இந்தத் தகவலை அடுத்து வேலூர் மாநகராட்சி நல அலுவலர் மருத்துவர் சித்ரசேனா, வேலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சத்துவாச்சாரி, காகிதப் பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தின்பண்டக் கடைகளில் இன்று (ஜூன் 24) சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, காகிதப் பட்டறை நைனியப்பன் தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் இருந்து 10 எண்ணிக்கையிலான சிரஞ்சி வகை சாக்லெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். இந்த வகை சாக்லெட்டுகள் எங்கே வாங்கப்பட்டன என்று கடையின் உரிமையாளரிடம் விசாரிக்கப்பட்டது. தொடர்ந்து வேலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தின்பண்ட மொத்த வியாபாரிகளின் கடைகள் அமைந்துள்ள சுண்ணாம்புக்காரத் தெருவில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது சிரஞ்சி வகை சாக்லெட்டுகள் எங்கும் கிடைக்கவில்லை. அங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு வட இந்தியாவில் இருந்து விற்பனைக்காக வந்திருந்த சாக்லெட்டுகள் என்றும், தற்போது விற்பனையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எந்தவிதத் தயாரிப்பு குறித்த தகவலும் இல்லாத சிரஞ்சி வகை சாக்லெட்டுகளை விற்பனை செய்யக் கூடாது என்று வியாபாரிகளை எச்சரித்தனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் செந்தில்குமார் கூறும்போது, ‘‘சிரஞ்சிகளில் அடைக்கப்பட்ட சாக்லெட் விற்பனை குறித்த தகவலின்பேரில் மார்க்கெட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஒரு பெட்டிக் கடையில் இருந்து விற்பனை ஆகாத சிரஞ்சி சாக்லெட்டுள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சாக்லெட்டுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு விற்பனைக்காக வாங்கி வந்துள்ளனர். இந்த வகை சாக்லெட்டுகள் வேலூரில் எங்கும் தயாரிக்கவில்லை. வட இந்தியாவில் இருந்து விற்பனைக்காக வந்துள்ளது.

சாக்லெட்டுகள் அடைத்து வைத்திருந்த சிரஞ்சிகள் உண்மையானவை கிடையாது. அவை எந்த மருத்துவக் கழிவும் கிடையாது. சாக்லெட் விற்பனைக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட அந்த சிரஞ்சியில் மருந்துகளை அளவிடும் அடையாளக் குறியீடு எதுவும் இல்லை. மேலும், ஊசி பொருத்தும் முனையும் இல்லை. சிரஞ்சி சாக்லெட்டுகளை விற்பனைக்குக் கொண்டுவரக் கூடாது என வியாபாரிகளை எச்சரித்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

தொடருமா சோதனை?

வேலூர் சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள சில வியாபாரிகள் வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் சிறுவர்களுக்கான தின்பண்டங்களை அதிக அளவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். வட இந்தியாவில் இருந்து மிகக் குறைந்த விலையில் வாங்கி வந்து இங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் இந்த வகை தின்பண்டங்கள் அடங்கிய பாக்கெட்டுகளில் சிறுவர்களைக் கவரும் வகையில் விளையாட்டுப் பொருட்களைச் சேர்த்துக் கொடுக்கின்றனர். இதன் தரம் குறித்தும், அதில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் குறித்தும் முறையான தகவல் எதுவும் இருக்காது என்பதால் தின்பண்ட மொத்த வியாபாரக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சிப்ஸ், கார்ன், சாக்லெட் பாக்கெட்டுகள், பிஸ்கெட்டுகள் குறித்து அவ்வப்போது கடைகள் மற்றும் கிடங்குகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x