Published : 24 Jun 2021 05:09 PM
Last Updated : 24 Jun 2021 05:09 PM
மதுரை எய்ம்ஸ் அமையும் இடம் அருகே ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை செய்வதாக தென்னக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டன. இதில், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடன் அறிவிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கிவிட்டன. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்கி தற்காலிக கட்டிடத்தில் வைத்து வகுப்புகள் நடக்கின்றன.
ஆனால், நீண்ட இழுபறிக்குப் பிறகு தற்போதுதான் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் கட்டுவதற்கு ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
750 படுக்கைகளுடன் உள் நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் 100 எம்பிபிஎஸ் 60 செவிலியர் இடங்களுடன் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மிகப்பிரமாண்ட உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் , செவிலியர், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணிபுரிவார்கள். அவர்களுக்கான தங்கும் குடியிருப்புகள், கட்டப்படும். தினமும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவ வல்லுநர்கள், அதிகாரிகள் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்வார்கள். அதுபோல், மருத்துவம் பார்ப்பதற்கு கன்னியாகுமரி முதல் திருச்சி வரையிலான மக்கள், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு வர வாய்ப்புள்ளது.
குறிப்பாக மதுரை - செங்கோட்டை, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி, திண்டுக்கல், காரைக்குடி ரயில் வழித்தடத்தில் உள்ள மக்கள் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர் என ஆயிரக்கணக்கான மக்கள் தோப்பூர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு வருவார்கள்.
எய்ம்ஸ் அமைய இருக்கும் தோப்பூரில் இருந்து 4.5 கி.மீ., தொலைவில் திருப்பரங்குன்றத்தில் ரயில்நிலையம் உள்ளது. இங்கு பெரும்பாலான விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் நின்று செல்கின்றன.
ஆனால், எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மிக அருகிலே 2 கி.மீ.,தொலைவில் செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில்நிலையம் அமைக்க வேண்டும் என்று தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கங்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அருகேயே ரயில்நிலையம் அமைக்க ரயில்வே நிலையம் பரிசீலிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுகுறித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பற்றி ஆர்டிஐ தகவல்களை பெற்று வரும் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரைத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ், மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை அமைய உள்ள இடம் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டி ரயில்வே துறைக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதற்கு பதிலளித்த தென்னக ரயில்வே மூத்த போக்குவரத்து மேலாளர் பரத்குமார் அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டிய கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடமானது திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தூரம் ஆனது 10 கிலோ மீட்டர் ஆகும். மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடம் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு மேல் உள்ளது. தற்போது, இதில் கூடுதல் கிராசிங் ஸ்டேஷனை வழங்குவதற்கான செயல்பாட்டுத் தேவை இல்லை. இருப்பினும் நிறுத்தத்திற்கான முன்மொழிவு தேவைகளின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படலாம் என்று கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்டங்களின் மிக முக்கியமான திட்டம். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் போது பல்வேறு காரணங்களுக்காக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வர். பாதுகாப்பான, சவுகரியமான பயணத்திற்கு மக்கள் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ளனர். ரயிலில் பயணக் கட்டணம் குறைவாக இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரயிலில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்.
வரும் காலங்களில் மெட்ரோ உள்ளிட்ட மின்சார ரயில்கள் குறைந்த தொலைவிற்கு அதிகளவில் இயக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும்போது மதுரை எய்ம்ஸ் என்ற பெயரில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும்போது தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT