Published : 24 Jun 2021 02:49 PM
Last Updated : 24 Jun 2021 02:49 PM
காவல்துறை அத்துமீறல் தொடர்வதை அரசு உறுதியாகத் தடுக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 24) வெளியிட்ட அறிக்கை:
"சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகில் உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் காவல்துறை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் விவசாயி முருகேசன் மரணமடைந்துள்ளார். இந்த அதிர்ச்சியளிக்கும் துயரச் செய்தியை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கவும், குற்றம் புரிந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்படவும் உத்தரவிட்டது ஆறுதல் அளிக்கிறது.
பல ஆண்டுகளாகக் காவல்துறையில் தொடர்ந்துவரும் அத்துமீறல், கடந்த ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும், மகனும் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவமாக வெளிப்பட்டது.
மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் அந்தத் துயரச் சம்பவத்தின் நினைவு நாளில், முருகேசன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் சிந்தனையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
மனித உரிமைகளையும், ஜனநாயக நடைமுறைகளையும் மதித்து, மக்களின் நண்பனாக சேவை புரியும் முறையில் காவல்துறையின் பணிமுறையை மாற்றியமைப்பது உடனடி அவசியமாகும்.
தேசிய காவல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு காவல் ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளும், உயர் நீதிமன்றங்களும் மற்றும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்புகளில் கூறியுள்ள வழிகாட்டும் நடைமுறைகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோள்கள் என அனைத்தும் அலட்சியப்படுத்தும் போக்கு இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது.
தமிழக காவல்துறையின் செயல்பாட்டில் பொருத்தமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT