Published : 24 Jun 2021 02:20 PM
Last Updated : 24 Jun 2021 02:20 PM
நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால், கொள்முதலை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 24) வெளியிட்ட அறிக்கை:
"காவிரிப் பாசன மாவட்டங்களிலும், வட மாவட்டங்களின் சில இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. விற்பனைக்காக பல்லாயிரக்கணக்கான மூட்டை நெல் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கும் நிலையில், அவை கொள்முதல் செய்யப்படாததால் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அப்பருவ நெல்களை கொள்முதல் செய்வதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 193 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் 200-க்கும் கூடுதலான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட தலா 10 ஆயிரத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
அதனால் புதிதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடமில்லாதது தான் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் 50-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், தலா 15 ஆயிரம் மூட்டைகள் முதல் 20 ஆயிரம் மூட்டைகள் வரை தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை பாதுகாப்பதற்காக விவசாயிகள் கூட்டம் கூட்டமாக காத்துக் கிடக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நடைபெற்றாலும் கூட ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் முதல் 900 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.
அதேநேரத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் குறைந்தது 3,000 முதல் 5,000 மூட்டைகள் வரை வருகின்றன. அதனால், அந்தப் பகுதிகளிலும் கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கும் நிலைக்கு நிர்வாகத்தின் தவறான முடிவுகள் தான் காரணமாகும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மூட்டைகள் தமிழகம் முழுவதும் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நெல் கொள்முதல் செய்யப்படாத காலங்களில் தான் கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், இப்போது கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் போது குறைந்தபட்சம் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் தான் காவிரி பாசன மாவட்டங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் பாதுகாப்பற்ற சூழலில் கிடக்கின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன.
விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல் மூட்டைகள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது; அதற்காக விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ஒருபுறம் இந்த அளவுக்கு புரட்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு, இன்னொரு புறம் நெல் கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நியாயமல்ல.
தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் எந்த நேரமும் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மழை பெய்தால் அரசு சார்பில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளும், விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளும் சேதமடையும்.
தெரிந்தே இப்படிப்பட்டதொரு பாதிப்பை தேடிக் கொள்ளக்கூடாது. எனவே, காவிரிப் பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதலை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT