Published : 24 Jun 2021 01:09 PM
Last Updated : 24 Jun 2021 01:09 PM

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பதுபோல் கடைசி 2 மாத ஆட்சியை எடப்பாடி பழனிசாமி மறந்துபோனார்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

சென்னை

கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக அதிமுக கூறமுடியாது. பிப் 26 முதல் மே 6 வரை 2 மாத ஆட்சியை அதிமுகவினர் மறந்தே போனார்கள். இதன் காரணமாக 26,000 என்கிற எண்ணிக்கையில் தொற்று உயர்ந்தது. ஆட்சி செய்யக்கூடாது என இவர்கள் கையை யாரும் கட்டிப்போட்டார்களா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று பேசியதாவது:

“ஏப்ரல் மாதத்தில் முழுமையாக அன்றைய முதல்வர் மேற்பார்வையில்தான் பணிகள் நடந்துள்ளன. ஆனால், கரோனா கட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அன்றைய தினம் ஏற்பட்ட பாதிப்பு 19,588. இவை அனைத்துக்கும் முந்தைய அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

மார்ச் 6ஆம் தேதியிலிருந்தே கரோனா ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. மார்ச் 30ஆம் தேதியே தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது என்று தமிழக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பள்ளிக் கல்வித்துறைக்கு எச்சரிக்கை விடுத்தது. ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பாதிப்பு அதிகம் பரவத் தொடங்கிவிட்டது. பாதிப்பு எண்ணிக்கை 5000லிருந்து 19,000 ஆக உயர்ந்தது.

ஆகவே கரோனாவை அதிமுக அரசு கட்டுப்படுத்திவிட்டது என்கிற வாதம் மிக மிகத் தவறானது. கரோனா பணியில் ஈடுபடக் கூடாது என்று யாராவது அவரது கையைக் கட்டிப்போட்டு வைத்திருந்தார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்று ஒரு திரைப்படம் வந்தது. அதுபோல பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதிவரை 2 மாத கால ஆட்சியை அதிமுக மறந்துவிட்டதா? என்று நான் கேட்க விரும்புகிறேன்.

ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்தும் அலட்சியமாக இருந்ததன் விளைவுதான் பாதிப்பு எண்ணிக்கை 26,000 எனக் கூடியது. இத்தகைய மோசமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தியதுதான் திமுக ஆட்சியின் மகத்தான சாதனை என்று நான் கூறினேன்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x