Published : 24 Jun 2021 11:30 AM
Last Updated : 24 Jun 2021 11:30 AM
நான் அண்ணாவின் அரசியல் வாரிசு, கருணாநிதியின் கொள்கை வாரிசு என, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை ஜூன் 21 அன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த விவாதங்களில், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (ஜூன் 24), ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
"என்னை முதல்வராக அமர வைத்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கும், திமுக உடன்பிறப்புகளுக்கும், தோழமைக் கட்சியினருக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி. 1920-ம் ஆண்டு முதல் 1937-ம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சி செய்தது.
சமூக நீதியை நீரூற்றி வளர்த்தது நீதிக்கட்சி. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியமைத்து நூறாண்டுகள் கடந்துவிட்டன. இந்த சமயத்தில் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
எங்களின் ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்பதை பெருமையுடன் கூறுகிறேன். நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா. அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி. கருணாநிதியின் தொடர்ச்சி நான், இந்த அரசு.
தமிழினத்தை நம்மால் தான் வளர்ச்சி பெற வைக்கமுடியும் என மக்கள் நம்மை ஆட்சியில் அமரவைத்துள்ளார்கள். என்னுடைய தொலைநோக்குப் பார்வையைத்தான் ஆளுநர் தன் உரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கடந்த 2 தினங்களாக சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார்கள். அதனை அரசுக்கு அவர்கள் கூறிய ஆலோசனைகளாகவே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில், நான் அண்ணாவின் அரசியல் வாரிசு. கருணாநிதியின் கொள்கை வாரிசு".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT