Published : 24 Jun 2021 11:20 AM
Last Updated : 24 Jun 2021 11:20 AM

எட்டுவழிச்சாலை, வேளாண் சட்டம், சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

எட்டுவழிச் சாலை, வேளாண் சட்டம், சிஏஏ, மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் உரையாற்றினார். பின்னர் அலுவல் ஆய்வுக் குழுவில் ஜூன் 24 வரை கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் உரையாற்றினர், கேள்வி எழுப்பினர்.

இறுதியாக இன்று காலை பேரவை தொடங்கியதும் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் வைத்த வாதம், எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

''நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 100-வது ஆண்டில் திமுக ஆட்சி அமைந்ததை பெருமையாகக் கருதுகிறேன். நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா. அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சி நான், இந்த அரசு. இந்த அரசின் கொள்கைகளைத் தமிழகம் எட்டவேண்டிய இலக்கு, இந்த அரசின் தொலை நோக்கைத்தான் ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டது.

நீதிக்கட்சியின் முதலாவது பிரதம அமைச்சர் கடலூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார், காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த காமராஜர், திமுகவைத் தோற்றுவித்து முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணா, இந்தத் தமிழகத்தை 19 ஆண்டுகள் ஆட்சி செய்த கருணாநிதி மற்றும் முதல்வராக இருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர்களையும் நினைவுகூர்வது எனது கடமையாகும், நமது முன்னோர்களை நினைவுகூர்வது என்பது தமிழர் பண்பாடு ஆகும்.

இந்தக் கூட்டத்தொடரில் திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் 22 உறுப்பினர்கள் கருத்துகளை எடுத்து வைத்துள்ளார்கள். அவர்கள் வாதத்தை நான் ஆலோசனைகளாக எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நான் அண்ணாவின் அரசியல் வாரிசு. கருணாநிதியின் கொள்கை வாரிசு.

ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம்தான். அதாவது ஆளுநர் உரை ட்ரெய்லர் தான். முழு நீளத் திரைப்படத்தைத் திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதைச் சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

எட்டுவழிச்சாலை உள்ளிட்ட மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

“கடந்த காலங்களில் மக்கள் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள், இந்தியக் குடியுரிமைச் சட்டம், எட்டு வழிச்சாலை, மீத்தேன், நியூட்ரினோ கூடங்குளம் திட்டத்துக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட திரும்பப் பெறப்படும்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேபோன்று கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் வாங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x