Last Updated : 24 Jun, 2021 05:51 AM

 

Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM

சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பை மீறி கோவை குளக் கரைகளில் தொடரும் ‘கான்கிரீட்’ பணி: ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய அரசுக்கு வலியுறுத்தல்

கோவை பேரூர் அருகே உள்ள கங்கநாராயண சமுத்திரம் குளக்கரையை தோண்டி கான்கிரீட் தளம் அமைக்க நடைபெற்றுவரும் பணி. படம்: ஜெ.மனோகரன்

கோவை

நொய்யல் ஆற்றை ரூ.230 கோடி மதிப்பில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ், கோவையில் 18 அணைக்கட்டுகள், 22 குளங்களைத் தூர்வாரி,சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆச்சான்குளம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், வெள்ளலூர் ஆகிய இடங்களில் உள்ள குளங்களின் கரைகளில் கான்கிரீட் தளம்அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளின்போது கரையோரம் உள்ள நாணல் புற்கள், புதர்களை முற்றிலுமாக அகற்றுவதால் குளங்களின் உயிர்ச் சூழல் பாதிக்கப்படும் என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்தனர். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி திமுக எம்.பி. கு.சண்முகசுந்தரம் மக்களவையில் செப்டம்பர் 19-ம் தேதி பேசும்போது, “கோவையில் அவசர கதியில் குளங்கள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. கான்கிரீட் கற்கள், கான்கிரீட் கரைசல்களைக்கொண்டு நீர்நிலைகளை பாழாக்கும் செயலில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்திருந்தார்.

அக்டோபர் 27-ம் தேதி கோவைவந்த உதயநிதி ஸ்டாலின், பேரூர் பெரியகுளத் துக்குள் நடைபெற்றுவரும் கான்கிரீட் கலவை தயாரிக்கும் பணியால்ஏற்படும் சூழல் பாதிப்பு குறித்துநேரில் பார்வையிட்டுக் கேட்டறிந்தார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில்தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட, அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தனது தேர்தல் அறிக்கையில், “நொய்யல் நதி, அதன் சூழலியல், பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படாத வகையில் அறிவியல் பூர்வமாக சீரமைக்கப்படும். குளக்கரை ஓரங்களில் கான்கிரீட் அமைப்பது தவிர்க்கப்படும்" என வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், புதுக்குளம், கோளராம்பதி, பேரூர் அருகே உள்ள சொட்டையாண்டி குட்டை, கங்காநாராயண சமுத்திரம், செங்குளம், சூலூர் குளங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர், சூழலியல் ஆர்வலர்கள்.

பாழாக்கும் செயல்

சிறுதுளி அமைப்பின் நிர்வாகஅறங்காவலர் வனிதா மோகன் கூறும்போது, "கோவை குளங் களுக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன. குளக்கரையில் இயற்கையானபல்லுயிர்ப் பெருக்கம் இருந்தால்தான் குளங்கள் உயிர்ப்போடு இருக்கும். இல்லையெனில் அதன் தன்மையே போய்விடும். கோவையில் உள்ள குளங்கள் ஏற்கெனவே நல்லநிலையில்தான் உள்ளன. அதில், கை வைக்க வேண்டிய அவசியமே இல்லை. குளங்களில் கான்கிரீட் அமைப்பது அவற்றை பாழாக்கும் செயல். நீர்நிலைகள் சார்ந்து கோவையில் இயங்கும் அமைப்புகள் இணைந்து அரசின் கவனத்துக்கு இதை கொண்டு செல்ல உள்ளோம்” என்றார்.

"குளங்களை சீரமைக்க போடப் பட்ட முந்தைய ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், அரசு தலையிட்டு அதில் மாற்றம் செய்ய வழிவகை உள்ளது. அந்த மாற்றத்தில், கரையில் கான்கிரீட் அமைப்பதற்கு பதில், கருங்கற்களை பதிக்க வேண்டும் என தெரிவித்தால் போதும். கருங்கற்கள் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்" என ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

அரசின் கவனத்துக்கு...

ஏற்கெனவே உள்ள திட்டத்தின்படியே கோவை குளங்களின் கரையில் கான்கிரீட் சிலாப் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கூறும்போது, “குளக்கரையில் கான்கிரீட் அமைப்பது சரியான வழிமுறை அல்ல. தேர்தல் நேரத்திலும் இதுதொடர்பாக பலமுறை பேசியுள்ளேன். ஆனால், எதிர்பாராதவிதமாக கோவைக்கும் அரசுக்கும், அரசியல் ரீதியாக இணைப்புப் பாலம் இல்லாமல் போனது. இருப்பினும், குளங்களில் கான்கிரீட் கரை அமைப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்”என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x