Last Updated : 23 Jun, 2021 08:49 PM

 

Published : 23 Jun 2021 08:49 PM
Last Updated : 23 Jun 2021 08:49 PM

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' மனுக்கள்; காரணமில்லாமல் நிராகரித்தால் நடவடிக்கை: திருப்பத்தூர் ஆட்சியர் எச்சரிக்கை

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள்.

திருப்பத்தூர்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தீர்வு காண வேண்டும். காரணம் இல்லாமல் மனுக்களைத் தள்ளுபடி செய்தால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள், சான்றிதழ்கள், பட்டாக்கள் மீதுள்ள நிலுவை குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசியதாவது:

''திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வட்டங்களில் உள்ள 15 உள் வட்டங்களைச் சேர்ந்த வருவாய் கிராமங்களில் பொதுமக்கள் வருவாய்த்துறை மூலம் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளை மனுக்களாக வழங்கி வருகின்றனர். இதில் வருவாய்ச் சான்றிதழ்கள் கோரியும், நிலம் மாற்றம், பட்டா பெயர் மாற்றம், உதவித்தொகை கேட்டும் அளிக்கப்பட்ட மனுக்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.

ஆவணங்களைச் சரிபார்த்து நிலுவையில் உள்ள மனுக்களை வரும் 28-ம் தேதிக்குள்ளாக விசாரணை நடத்தி ஜூலை 8-ம் தேதிக்குள் அனைத்து மனுக்கள் மீதும் தீர்வு காண வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி அந்தந்த வட்டாட்சியர்கள் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாகப் பட்டா மாற்றம், நில மாற்றப் பணிகள், சட்டம்- ஒழுங்கு பணிகளில் ஒவ்வொரு வட்டாட்சியரும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தீர்வு காண நிலவுடமை மேம்பாட்டு திட்டம் மனு மீது மாவட்ட வருவாய் அலுவலர் வாதி, பிரதிவாதிகளை நேரில் வரவழைத்து அவர்கள் அளிக்கும் ஆவணங்களைச் சரிபார்த்து அதன் அடிப்படையில் உரிய தீர்வு காண வேண்டும்.

அதேபோல, பட்டாவில் பெயர் மாற்றம், பெயர் திருத்தம் செய்ய வழங்கப்பட்ட மனுக்கள் மீது சார் ஆட்சியர் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர்கள் உரிய ஆவணங்களைச் சரிபார்த்து அதற்கான தீர்வுகளைக் காண வேண்டும். இதற்கான வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களின் அறிக்கைக்காகக் காலம் தாழ்த்தத் தேவையில்லை. மிகவும் பிரச்சினையுள்ள மனுக்கள் மீது மட்டுமே வட்டாட்சியர் அறிக்கை பெற்றபிறகு தீர்வு காணலாம்.

மேலும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 வட்டங்களில் ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை விரைவாக விசாரணை நடத்தி அதில் தீர்வு காண வேண்டும்.

60 நாட்களுக்கு மேலாக விசாரணையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வுகாண வேண்டும். காரணம் இல்லாமல் மனுக்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது. முடிந்தவரை மனுக்கள் மீதான தீர்வு காண வழிதேட வேண்டும். தவறும் பட்சத்தில் அரசு அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’.

இவ்வாறு ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் (பொறுப்பு) வில்சன் ராஜசேகர், துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர்கள் சிவப்பிரகாசம் (திருப்பத்தூர்), மோகன் (வாணியம்பாடி), அனந்தகிருஷ்ணன் (ஆம்பூர்), மகாலட்சுமி (நாட்றாம்பள்ளி), சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் குமார், பூங்கொடி, சாந்தி, சிவசுப்பிரமணி உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x