Last Updated : 23 Jun, 2021 08:42 PM

 

Published : 23 Jun 2021 08:42 PM
Last Updated : 23 Jun 2021 08:42 PM

கரோனாவால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிவாரணம்: இஎஸ்ஐசி மண்டலத் துணை இயக்குநர் தகவல்

கோவை

கோவிட்-19 நிவாரண திட்டத்தின்கீழ் கரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கோவை இஎஸ்ஐசி சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) கே.ரகுராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''கரோனா தொற்று தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொற்றின் இரண்டாவது அலை இளம் வயதுடையவர்களின் உயிருக்கும் ஆபத்தாக அமைந்துள்ளது. எனவே, கரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்காக தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (இஎஸ்ஐசி) கோவிட்-19 நிவாரண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் கரோனாவால் உயிரிழந்தால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 90 சதவீத சராசரி மாத ஊதியம் நிவாரணமாக மாதந்தோறும் அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்படும். இத்திட்டம் 2020 மார்ச் 24-ம் தேதி முதல் 2022 மார்ச் 23-ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்தக் குறிப்பிட்ட காலத்துக்குள் உயிரிழந்த, காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு உதவி பெற, கரோனாவால் உயிரிழந்த தொழிலாளி தொற்று கண்டறியப்பட்ட தேதிக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாக இஎஸ்ஐசி ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும். இறந்த தொழிலாளி, தொற்று கண்டறியப்பட்ட தேதி அன்று வேலையில் இருந்திருக்க வேண்டும்.

தொற்று கண்டறியப்பட்ட தேதிக்கு ஓராண்டுக்குள் அவரது பேரில் குறைந்தபட்சம் 70 நாட்களுக்கு இஎஸ்ஐ பங்களிப்பு இருக்க வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தின் கீழ், ஒரு தொழிலாளி நோய் காரணமாக விடுப்பில் இருக்கும் காலத்தில் மருத்துவரால் சான்று அளிக்கப்படும் பட்சத்தில், தனது தினசரி ஊதியத்தில் 70 சதவீதத் தொகையை ஊதிய இழப்பாகப் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு ஓராண்டில் அதிகபட்சம் 91 நாட்களுக்குப் பெற இயலும்.

மேலும் ஒரு தொழிலாளி எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் பட்சத்தில், ஈமச்சடங்கு செலவாகக் குடும்ப உறுப்பினருக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது. இதுதவிர, காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் குழந்தைகளுக்கு இஎஸ்ஐ மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை www.esic.nic.in என்ற இணையதளத்திலும், அருகில் உள்ள இஎஸ்ஐசி கிளை அலுவலகத்தை அணுகியும் தெரிந்துகொள்ளலாம் அல்லது 0422-2362329 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்''.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x