Published : 23 Jun 2021 04:09 PM
Last Updated : 23 Jun 2021 04:09 PM
அமைச்சரவை பதவியேற்பை வரும் 27-ம் தேதி நடத்துமாறு முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். அதை முதல்வரும் ஏற்றுள்ளார். விரைவில் இதை முறைப்படி அறிவிக்க உள்ளார். முன்னதாக முதல்வரின் காலில் விழுந்து பாஜக எம்எல்ஏக்கள் ஆசிர்வாதமும் பெற்றனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக ரங்கசாமியும், பேரவைத் தலைவராக செல்வமும் பதவியேற்றுள்ளனர். 50 நாட்களுக்குப் பிறகு அமைச்சர்கள் பட்டியலை முதல்வர் ரங்கசாமி இன்று காலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் தமிழிசையிடம் அளித்தார். ஆளுநரும் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார்.
இச்சூழலில் சட்டப்பேரவையில் முதல்வர் அறைக்கு பாஜக எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் மற்றும் பேரவைத் தலைவர் செல்வம் ஆகியோர் வந்தனர். அப்போது பாஜக எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
அதையடுத்து சிறிது நேரம் முதல்வரிடம் பேசிவிட்டு வந்தனர். பின்னர் நமச்சிவாயம் கூறுகையில், "அமைச்சர்கள் பட்டியலை முதல்வர் தந்துள்ளார். அமைச்சரவைப் பதவி ஏற்பு தொடர்பாக நாங்கள் தேதியை முதல்வரிடம் தந்துள்ளோம். அந்த நாளில் பதவியேற்கக் கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வரும் அதற்கு உறுதி தந்துள்ளார். விரைவில் முதல்வர் பதவியேற்கும் தேதியை அறிவிப்பார்." என்று குறிப்பிட்டனர்.
இதுபற்றி பாஜக தரப்பில் விசாரித்தபோது, "முதல்வர் ரங்கசாமி பவுர்ணமி நாளான 24-ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்க விரும்பினார். நமச்சிவாயம் வரும் 27-ம் தேதி மதியம் 2.30 முதல் 3.15 மணிக்குள் பதவியேற்பது உகந்ததாக இருக்கும் என்று கோரிக்கை வைத்துள்ளார்" என்று குறிப்பிட்டனர்.
அதையேற்று பதவியேற்பு விழா வரும் 27-ல் நடப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களும் தெரிவித்தன.
அமைச்சர்கள் யார் யார்?
அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "அமைச்சர்கள் பட்டியலை வழங்கியுள்ளேன். உள்துறை அமைச்சகம் அனுமதி வந்தவுடன் பெயர் விவரம் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.
பாஜக தரப்பில் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதர அமைச்சர்கள் பட்டியலில் உள்ளோர் விவரங்கள் தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, "லட்சுமி நாராயணன், லட்சுமிகாந்தன், திருமுருகன் ஆகியோரின் பெயர்கள் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இத்தகவல் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT