Published : 23 Jun 2021 04:02 PM
Last Updated : 23 Jun 2021 04:02 PM

குரங்கு, கரடி, காட்டெருமைகள், வவ்வால்களால் குறையும் மகசூல்: ஆண்டுக்கு பல லட்சம் வருவாய் இழக்கும் பேரிக்காய் விவசாயிகள்

சேதமடைந்த பேரிக்காய்களைக் காண்பிக்கும் விவசாயி.

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பேரிக்காய்களைக் குரங்கு, கரடி, காட்டெருமைகள், வவ்வால்கள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் ஆண்டுக்குப் பல லட்சம் ரூபாய் வருவாயை இழக்கின்றனர்.

மிதமான வெப்பம் உள்ள குளிர் பிரதேசங்களில் விளையும் ஏழைகளின் ஆப்பிளான பேரிக்காய், தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் மலைகளில் ஒருகாலத்தில் கணிசமாக விளைந்தது. ஆனால், இப்போது இந்த விளைச்சல் வெகுவாகச் சரிந்துவிட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் முன்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேரிக்காய் மரங்கள் இருந்தன. இது, இப்போது மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது. ஜூன் முதல் செப்டம்பர் வரை காய்க்கும் பேரிக்காய்கள் முன்பு, ஒரு மரத்துக்கு சுமார் 100 கிலோ வரை கிடைத்தன. இப்போது, 25 கிலோ எடுப்பதே பெரும்பாடாய் இருக்கிறது.

மகசூல் குறையக் காரணம்:

இப்படி மகசூல் குறைந்துபோனதற்கு முக்கியக் காரணமே வனவிலங்குகள்தான் என்கின்றனர் பேரிக்காய் விவசாயிகள். குரங்குகள், கரடிகள், காட்டெருமைகள் வரிசையில் தற்போது இரண்டாண்டுகளாக வவ்வால்களும் இணைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குன்னூர் அருகே வெலிங்டன் பழத்தோட்டம் பகுதியில் பேரிக்காய் மகசூல் எடுக்கும் பிலால் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரியில் 50 ஏக்கரில் மட்டுமே பேரிக்காய் மரங்கள் உள்ளன. முன்பெல்லாம் இந்தப் பகுதியில் குரங்குகள் தொல்லையோ, காட்டெருமைகள் தொல்லையோ அதிகமாக இருக்காது.

ஆனால், இப்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, தொல்லையும் அதிகரித்துள்ளது. குரங்குகள், கரடிகள் மரம் ஏறி பேரிக்காய்களைக் கடித்து விடுகின்றன. காட்டு மாடுகள் மரங்களை முறித்து காய்களைச் சாப்பிடுகின்றன. குரங்குகளும், கரடிகளும் சேதப்படுத்தும் பேரிக்காய்கள் அவை சாப்பிடுவதைவிட அதிகம்.

காட்டெருமைகளைத் துரத்தினால் ஓடிவிடும். ஆனால், கரடிகள் சீறிட்டு வரும், நாம் பயந்து ஓடும் நிலை உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டாண்டுகளாக வவ்வால்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. கூட்டமாக இரவில் வரும் இவை தோட்டத்திலேயே தங்கி பேரிக்காய்களைக் கடித்துச் சேதப்படுத்தி விடுகின்றன.

இதுகுறித்து, வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையிடம் பல முறை புகார் அளித்துவிட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரிக்காய் மகசூல் ஆண்டுக்கு ஒரு முறைதான். மரங்களை 15 ஆண்டுகள் பராமரித்தால்தான் காய் காய்க்கும். தற்போது, ஆண்டுக்கு ரூ.3-லிருந்து ரூ.4 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது" என்றார்.

பேரிக்காய்கள் சீசன் பழம் என்பதால், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருவாய் கிடைக்கும். இந்நிலையில், ஜாம் தயாரிக்கும் நிறுவனங்கள் பேரிக்காய்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு மொத்த வருவாய் கிடைத்தது.

சட்டி பேரி கிலோ ரூ.30 வரையிலும் மற்ற பேரிக்காய்கள் கிலோ ரூ.50-க்கும் அடக்கமாகவே விற்கிறது. இந்நிலையில், பறிக்கும் கூலியும், விலங்குகள் சேதப்படுத்தும் பேரிக்காய்களின் மதிப்பையும் சேர்த்துக் கழித்தால் எங்களுக்கு என்னதான் மிஞ்சும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள், பேரிக்காய் மகசூல் எடுப்பவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x