Published : 23 Jun 2021 03:39 PM
Last Updated : 23 Jun 2021 03:39 PM

காவல் துறையினர் தாக்கியதில் வியாபாரி முருகேசன் உயிரிழப்பு; குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குக: தினகரன்

தினகரன்: கோப்புப்படம்

சென்னை

காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நேற்று (ஜூன் 22) ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் வந்த முருகேசன் என்ற மது அருந்திய நபரை, காவல் துறையினர் தாக்கியதில், அவர் மருத்துவமனையில் இன்று (ஜூன் 23) உயிரிழந்தார். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 23) தன் ட்விட்டர் பக்கத்தில், "சேலத்தில் காவல்துறையினர் தாக்கியதால் முருகேசன் என்கிற வியாபாரி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்களிடம் காவல்துறையினர் இத்தகைய வன்முறைப் போக்கைக் கடைப்பிடிப்பதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சாத்தான்குளத்தில் தந்தை - மகன் இருவரும் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததன் முதலாமாண்டு நினைவு நாளில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், மக்களிடம் வன்முறையைக் கையாளாமல் நடந்து கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளும், காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஆலோசனைகளும் காவல்துறையினருக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தினகரன் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x