Published : 23 Jun 2021 02:34 PM
Last Updated : 23 Jun 2021 02:34 PM
காரைக்காலில் இன்று(ஜூன் 23) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வேளாண் அடையாள அட்டையை விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
காரைக்காலில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என, அப்போதைய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு அக்.1-ம் தேதி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் தொடர்ந்து குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. கரோனா பரவல் சூழல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் உடனடியாக குறை தீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அண்மையில் விவசாயிகள் பலர் வலியுறுத்து வந்தனர்.
இதையடுத்து காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் இன்று ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமை வகித்தார். துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், கூடுதல் வேளாண் இயக்குநர்(பொ) ஜெ.செந்தில்குமார் மற்றும் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பாசனதாரர் சங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரோனா பரவல் சூழல் காரணமாக வழக்கத்தைவிட குறைந்த எண்ணிக்கையிலான விவசாயப் பிரதிநிதிகளே பங்கேற்க அழைக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியது, "காரைக்கால் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான வேளாண் அடையாள அட்டை விரைவாக வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், வடிகால்கள், ஏரிகளை தூர்வார வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து உடனடியாக விவசாயிகளுக்கு பெற்று தரவேண்டும். உரம் மற்றும் வேளாண் இடுபொருட்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் நியாயமான விலையிலும், தடையின்றியும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் மூலம் பயிர் மற்றும் நகைக் கடன் குறைந்த வட்டியில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்களை போதுமான அளவில் நியமிக்கவேண்டும். விவசாய விளை பொருட்களை வாங்க வரும் பிற மாநில வியாபாரிகளை தடையின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் இடங்களில் பாதிக்கப்படும் வாய்கால்கள், வடிகால்களை சரிசெய்ய வேண்டும். விளைநிலங்களில் பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எடுத்துக் கூறினர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
கூடுதல் வேளாண் இயக்குநர்(பொ) ஜெ.செந்தில்குமார்: விவசாயிகளுக்கான அடையாள அட்டையை ஸ்மார்ட் அட்டையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு அதில் விவரங்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்குள் வேளாண் அடையாள அட்டை கிடைக்கும்" என்றார்.
மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா பேசியது, "காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் நன்மைக்காக, நபார்டு வங்கி மூலம் மத்திய அரசின் சார்பில் நெல் மற்றும் பருத்திக்கான உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் புதிதாக தொடங்கப்படவுள்ளது. இதில் விவசாயிகள் உறுப்பினர்களாக சேர வேண்டும். இதன் மூலம் குறைந்த விலையில் வேளாண் இடுபொருட்களை வாங்க முடியும். நியாயமான விலைக்கு வேளாண் உற்பத்தி பொருட்களை விற்க முடியும். விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட முடியும். விவசாயிகள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.
மேலும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் மீது தொடர்புடைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT