Published : 23 Jun 2021 02:33 PM
Last Updated : 23 Jun 2021 02:33 PM
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கை மீறி இரு சக்கர வாகனத்தில் வந்த மது அருந்திய நபரை, காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில், அவர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, சம்மந்தப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தில், குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், ஆத்தூரை அடுத்த ஏத்தாப்பூர் அருகே எடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் (40). முருகேசனும், அவரது நண்பர்கள் சங்கர், உமாபதி ஆகியோர், அருகிலுள்ள கல்வராயன் மலையில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை கிராமத்துக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் நேற்று (ஜூன் 22) திரும்பினர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மது அருந்திய நிலையில் வந்த அவர்களை, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், அவர்களிடம் மது கடத்தி வந்துள்ளனரா என விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், முருகேசனை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் சில காவல் துறையினர் தாக்கினர். மது போதையில் இருந்த முருகேசனை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்குவதும், இதனை திவாகரன் என்ற காவலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்வது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
இதனிடையே, காவல்துறையினர் தாக்கியதில், சாலையிலேயே மயங்கி விழுந்த முருகேசனை அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி, இன்று (ஜூன் 23) காலை முருகேசன் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.
மேலும், ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகிறார்.
காவல் துறையினர் தாக்கியதை அடுத்து, முருகேசன் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT