Published : 23 Jun 2021 01:23 PM
Last Updated : 23 Jun 2021 01:23 PM

ஒன்றிய அரசு என்கிற வார்த்தையைக் கேட்டு மிரள வேண்டாம்; அதைப் பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை

ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டேயிருப்போம் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சமீபகாலமாக திமுக அரசு பொறுப்பேற்றபின் தமிழக அரசு என்பதைத் தமிழ்நாடு அரசு என்றும், மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்றும் அரசு அழைக்கிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் ஆனது. தற்போது இன்று சட்டப்பேரவையில் ஒன்றிய அரசு என ஏன் அழைக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

“பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் உள்ளது. India, that is Bharat, shall be a Union of States" என்றுதான் இருக்கிறது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.

‘ஒன்றியம்’ என்பது தவறான சொல் அல்ல, ‘மாநிலங்கள் ஒன்றுசேர்ந்தது’ என்பதுதான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் அண்ணா சொல்லாததை, எங்கள் தலைவர் கருணாநிதி சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, அதை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திமுகவினுடைய 1957ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே 'இந்திய யூனியன்' என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 1963 ஜனவரி 25, நாடாளுமன்ற மாநிலங்களவையில், அண்ணா பேசுகிறபோது, குறிப்பிட்டார். “அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது, பொதுமக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.

சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே - அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது" என்றுதான் அண்ணா பேசியிருக்கிறார்.

‘சமஷ்டி’ என்ற வார்த்தையை ம.பொ.சி. பயன்படுத்தியிருக்கிறார். 'வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு - வருக உண்மையான கூட்டாட்சி' என்று ராஜாஜியே எழுதியிருக்கிறார்.

எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x