Published : 23 Jun 2021 01:05 PM
Last Updated : 23 Jun 2021 01:05 PM
தமிழகத்திற்கு நீட் விலக்கு கேட்கும்போது, பாஜக ஆதரவு அளிக்கத் தயாரா என, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் (ஜூன் 21) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று (ஜூன் 23) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
அப்போது, பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நீட் தேர்வு விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து பதிலளித்தார். அப்போது, தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்பதில், ஆளும் கட்சி உறுதியாக இருக்கிறது எனவும், எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவும் அதே நிலைப்பாட்டில்தான் இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், நீட் விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார். அனைத்துத் தரப்பும் நீட் விலக்குக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், இதற்கு பாஜக ஆதரவு குரல் கொடுக்கத் தயாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்டு அது நடக்குமானால் நாங்கள் ஆதரவு தருகிறோம் எனக் கூறினார்.
முன்னதாக, திமுக ஆட்சியமைத்தால் நீட் விலக்கு பெற்றுத்தரும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதையடுத்து,சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைந்த பிறகு, நீட் தேர்வு தாக்கங்கள் குறித்து அறிய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 உறுப்பினர்களைக் கொண்ட குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அக்குழுவுக்கு neetimpact2021@gmail.com என்ற இ-மெயிலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை அனுப்பி வருகின்றனர்.
இதனிடையே, திமுக நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதாக பொய் வாக்குறுதி அளித்திருப்பதாக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், நீட் விலக்குக்கு பாஜக ஆதரவு அளிக்கத் தயாரா என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT