Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM
கோவையில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் அதிகாரிகள் செல்வாக்கு செலுத்தக் கூடாது எனவும், பொதுமக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளுடன் டோக்கன் பெற வரக்கூடாது எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவையில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த அலை தொடங்கும் முன்பு தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று 43 மாநகராட்சி பள்ளிகளில், 18 வயதுக்குமேற்பட்ட தலா 100 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன்தினமே தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை 7 மணி முதல் ஒவ்வொரு தடுப்பூசிமையத்திலும் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பல இடங்களில் குறைவான அளவில் டோக்கன் வழங்கப்பட்டதாக கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, சிங்காநல்லூர் எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனியில் 30 பேருக்கு மட்டுமே டோக்கன்வழங்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களை கலைந்து போக செய்தனர்.
இதேபோல, ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 80 பேருக்கும், வெள்ளக்கிணறு பகுதியில் 61 பேருக்கும் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விளாங்குறிச்சி பகுதியில் டோக்கன் வழங்குவதில் அரசியல் கட்சியினர் ஆதிக்கம் செலுத்துவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “ஒரு மையத்துக்கு200 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால், 50 தடுப்பூசிகளுக்கான டோக்கன்களை அதிகாரிகள், கட்சியினர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி எடுத்துக் கொள்கின்றனர்” என்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா கூறும்போது, “கோவை மாநகருக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியுள்ளோம். தடுப்பூசி மையங்களில் அதிகாரிகள்உட்பட யாரும் செல்வாக்கு செலுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பீளமேடு பகுதியில் ஒரே நபர் 10 ஆதார் அட்டைகளுடன் வந்து டோக்கன் கேட்டுள்ளார். மேலும் சில இடங்களில் ஒருவரே 4, 5 ஆதார் அட்டைகளை எடுத்து வந்து டோக்கன் கேட்கின்றனர்.
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே நபர் வந்து டோக்கன்பெறுவதை ஏற்க இயலாது. அவரவர் வந்து முறைப்படி டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு அதிக டோக்கன்களை அளித்தால் வரிசையில் காத்திருக்கும் பிறர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒதுக்கீடு செய்யப்படும் அளவை பொறுத்தே தடுப்பூசி 100 பேருக்கா? அல்லது 200 பேருக்கா? என முடிவு செய்கிறோம். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைத்து விடும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT