Last Updated : 23 Jun, 2021 03:13 AM

 

Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM

150-வது ஆண்டை கொண்டாட வேண்டிய நிலையில் முடங்கி கிடக்கும் சிவகங்கை பூங்கா

தஞ்சாவூர்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா சீரமைக்கப்படும் என கூறி 3 ஆண்டுகளாக பூங்காவை பூட்டிவிட்டு, எந்த ஒரு பணியையும் தொடங்காமல் தொடக்க நிலையிலேயே முடங்கியுள்ளதால், தஞ்சாவூர் பகுதி மக்கள் பொழுதுபோக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருவது சிவகங்கை பூங்காவாகும். பெரிய கோயில் அருகே இப்பூங்கா 20 ஏக்கரில் 1871-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் உள்ளே 10 ஏக்கரில் நீர் வற்றா குளமும், 10 ஏக்கரில் பூங்காவும் உள்ளன. பூங்காவில் மான்கள், ஒட்டகம், நரி, குரங்குகள், முள்ளம்பன்றி, சீமை எலி, முயல், பறவைகள், கிளிகள் என ஏராளமாக விலங்கினங்களும், பறவைகளும் வளர்க்கப்பட்டு வந்தன.

பின்னர் சிறுவர்களுக்கான ரயில், தொங்குபாலம், படகு சவாரி, நீச்சல் குளம், அறிவியல் பூங்கா, நீர் சறுக்கு விளையாட்டுகளும் கொண்டு வரப்பட்டன. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுற்றுலா வரும் அனைவரும் பூங்காவுக்கு வந்து செல்லும் வகையில் அனைத்து பொழுதுபோக்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டதால், இங்கு நாள்தோறும் 2 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் பேரும் வந்து சென்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

சிவகங்கை பூங்காவில் ஏற் கெனவே இருந்த பொழுதுபோக்கு அம்சங்களை மேலும் செம்மைப் படுத்த ஏதுவாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் பூங்கா முழுவதும் புதிய நடைபாதை, குளத்தின் நடுவே உள்ள கோயிலுக்கு சென்று வர புதிய தொங்கு பாலம், புதிய படகுகள், செயற்கை நீரூற்றுகள், ஸ்கேட்டிங் தளம் என பூங்கா முழுமையாக சீரமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இதற்காக கடந்த 2019 ஏப்ரல் மாதம் பூங்கா மூடப்பட்டது. இப் பணிகளை 6 மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு, இங்கிருந்த மான்கள் கோடியக்கரை சரணாலயத்துக்கும், நரிகள் மற்றும் பறவைகள் வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இதனிடையே, பூங்காவில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றது. அதன்பின் அந்த தடையையும் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. ஆனால் பூங்கா மூடப்பட்டு 3 ஆண்டுகளாகியும் பணிகளை தொடங்காமல் மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.

இந்தப் பூங்கா தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆன நிலையில், இதை விமரிசையாக கொண்டாடி யிருக்க வேண்டிய சூழலில், தற்போது பூங்கா பூட்டப்பட்டு கிடப்ப தாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சுவர் இடிப்பு

இதுகுறித்து தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன் கூறியதாவது:

தமிழகத்திலேயே மிகப்பழமையான இந்த பூங்கா மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்து வந்தது. தற்போது இந்தப் பூங்காவை சீரமைக்கிறோம் எனக்கூறி அதற்கான எந்த பணியையும் தொடங்கவில்லை.

இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பு என்பது பெரிய கோயிலுக்கு மட்டும் தான். இந்த பூங் காவை எப்படி தங்களது இடம் என தொல்லியத்துறையினர் கூறு கிறார்கள் எனத் தெரியவில்லை. இதை எடுத்துக்கூற நிர்வாகத்தில் திறமையான அதிகாரிகள் இல்லை. மேலும், பூங்காவின் கிழக்குப் பகுதியில் 7 அடி உயரத்துக்கு இருந்த சுற்றுச்சுவரை தொல்லியல் துறையினர் இடித்துவிட்டு, அங்கு இரும்பு கம்பிகளைக் கொண்டு தடுப்புகளை அமைத்துள்ளது வேதனை அளிக்கிறது என்றார்.

மாநகராட்சிக்கு அனுமதி

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையின் முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறும்போது, ‘‘பூங்காவில் குறிப்பிட்ட சில பணிகளை மட்டும் செய்யக்கூடாது. மற்ற பணிகளை மேற்கொள்ளலாம் எனக் கூறி மாநகராட்சிக்கு அனுமதி வழங்கி விட்டோம். பூங்காவின் பசுமையை எல்லோரும் கண்டுகளிக்கலாம் என்பதற்காகவே அங்குள்ள தடுப்புச் சுவரை அகற்றி விட்டு, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பு.ஜானகி ரவீந்திரன் கூறும்போது, ‘‘தொல்லியல் துறையின் வழக்கால் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த வழக்கு முடிந்து அனுமதி கிடைத்துள்ளதால், விரைவில் பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x