Last Updated : 22 Jun, 2021 07:56 PM

 

Published : 22 Jun 2021 07:56 PM
Last Updated : 22 Jun 2021 07:56 PM

தமிழக கோயில் சொத்து விவரங்கள் 70 சதவீதம் இணையத்தில் பதிவேற்றம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை

தமிழகத்தில் கோவில் சொத்துக்களின் விபரங்கள் 70 சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

குமரி மாவட்ட மரபு சார் மீட்புக் குழு செயலர் கிருஷ்ணமணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் 1956-க்கு முன்பு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டதும் குமரி மாவட்ட கோயில்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தக் கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் வருவாய்த்துறை சார்பில் ஜமாபந்தி (பசலி கணக்கெடுப்பு) நடத்தப்படுவது வழக்கம். ஜமாபந்திக்கு முன்பு கோயில்களின் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இதை வருவாய்த்துறை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை.

எனவே, நடப்பு பசலியாண்டின் ஜமாபந்திக்கு முன்பு கோயில்களில் சொத்துக்களை வரைமுறைப்படுத்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஏ.கே.மாணிக்கம் வாதிடுகையில், தமிழகத்தில் கோயில் சொத்துக்களின் 70 சதவீத விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கால் பதிவேற்றம் செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மீதமுள்ள சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.விரைவில் கோயில் சொத்துக்களின் முழு விபரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.

இதையடுத்து, கோயில் சொத்து விபரங்கள் 70 சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வரை மனுதாரர் காத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு கோயில் சொத்துக்கள் குறித்து போதிய விபரங்கள் இணையதளத்தில் இல்லாத நிலையில் அதிகாரிகளிடம் மனு அளிக்கலாம். அந்த மனு மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x