Published : 22 Jun 2021 07:04 PM
Last Updated : 22 Jun 2021 07:04 PM

முதல்வர் ஸ்டாலினால் கரோனா தொற்று ஒருசில நாட்களில் முற்றுப் பெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளால் கரோனா தொற்று ஒருசில நாட்களில் முற்றுப் பெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (22-06-2021) சட்டப்பேரவையில் ஆற்றிய உரை:

''மே 7ஆம் தேதி பொறுப்பேற்றோம். பொறுப்பேற்ற அன்று தமிழகத்தின் தொற்றின் எண்ணிக்கை 26,465. மே 21ஆம் தேதி அது 36,184 ஆக உயர்ந்தது. எனினும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பதற்கு முன்னாலேயே அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினார். பொறுப்பேற்ற அன்றைக்கே தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவையை வலியுறுத்தி பிரதமருக்குக் கடிதம் எழுதினார். 8ஆம் தேதி மீண்டும் ஒரு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், பிரதமரோடு நேரடியாகப் பேசினார்.

13ஆம் தேதி மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பி 10-க்கும் மேற்பட்ட நாட்கள் அங்கேயே முகாமிடச் செய்து, தமிழக அரசின் கரோனா சம்பந்தமான தேவைகளை, சம்பந்தப்பட்ட துறைகளிடத்தில், அலுவலர்களிடத்தில், அமைச்சர்களிடத்தில், பிரதமரிடத்தில் கோரிக்கை வையுங்கள் என்று தினந்தோறும் அவரை வழிநடத்தினார்.

தமிழகத்தின் தேவை மட்டுமல்ல, இந்தியாவின் தேவையையே பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கான தடுப்பூசிகள் தயாரிக்கிற மையங்கள் தமிழகத்திலே உள்ளன. ரூ.700 கோடி செலவில் ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தயாரான செங்கல்பட்டு HLL இன்றைக்கு தயாராக இருக்கின்றது. 2012-இல் 137 கோடி ரூபாய் செலவில் தயாராகியிருக்கிற Pasteur filling and finishing பிரிவு இப்போது தயாராகி இருக்கின்றது. மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை நாங்கள் தயாரித்து தருவோம் என்கின்ற அறிக்கையை மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

எனவே, தமிழக முதல்வர் உடனடியாக இந்த HILL, Pasteur ஆகியவற்றைத் திறந்து தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதம் எழுதினார். எழுதியதோடு மட்டுமல்ல, 14ஆம் தேதி நேரடியாகப் பிரதமரைச் சந்தித்து, எல்லாக் கோரிக்கைகளையும் வைத்தார்.

கோயம்புத்தூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களை ஊக்குவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகளால், அரசு பொறுப்பேற்கிறபோது 26,465 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை மே 21ஆம் தேதி 36,184 ஆக அதிகரித்து, நேற்றைக்கு (ஜூன் 21) 7,427 என மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்தத் தொற்று இன்னும் ஒரு வாரம்கூடத் தாண்டாது; ஒரு சில நாட்களில் இந்தத் தொற்று முற்றுப் பெறும்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x