Published : 22 Jun 2021 06:54 PM
Last Updated : 22 Jun 2021 06:54 PM
தமிழகத்தில் கரோனா 2-வது அலையில் ஒரே மாதத்தில் மட்டும் 47 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக சிறப்பு எஸ்.ஐ.,க்கள் அதிகமாக மரணமடைந்து இருப்பதாகக் கூறும் சில புள்ளிவிவர தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:
கரோனா தடுப்புப் பணிகளில் சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி போன்ற துறைகளுடன் காவல்துறையினரும் முன்களத்தில் நின்று பணிபுரிகின்றனர்.
இவர்களிலும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது என்பது தடுக்க முடியவில்லை. உயிரிழப்பைத் தடுக்க, முதல் அலையில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டது.
ஓய்வு வயதை நெருங்கும், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட இணைநோய் பாதிப்பில் இருக்கும் காவல்துறையினருக்கு கரோனா தடுப்புப் பணியில் இருந்து சில விலக்கு அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மொத்த காவல்துறையினரின் எண்ணிக்கையின் அடிப்படையில் 3 சுழற்சியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முகக்கவசம், சானிடைசர் போன்ற தடுப்பு உபகரணங்களும் வழங்கி பாதிப்பு, உயிரிழப்பைத் தடுக்க முயன்றனர். இருப்பினும், 2வது அலையில் ஓரிரு மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் இணைநோய் பாதிப்பு இருக்கும் காவல்துறையினருக்கு சலுகை இல்லை.
அந்த வகையில் கடந்த முறையைவிட, இரண்டாவது அலையில் தொற்று பாதிப்பு அனைத்து தரப்பிலும் அதிகரித்த நிலையில், காவல் துறையினரையும் விட்டுவைக்கவில்லை.
ஒரே மாதத்தில் (மே1 முதல் 31 வரை) மட்டும் 83 பேர் இறந்த நிலையில், கரோனாவுக்கு மட்டுமே 47 பேர் குறிப்பாக 1988, 1993,1994, 1997-98ல் பணியில் சேர்ந்த சிறப்பு எஸ்ஐக்கள் மட்டும் 30 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிற நோய் பாதிப்பால் உயிரிழந்த 18 பேரில் 12 பேரும், மாரடைப்பால் உயிரிழந்த 7 பேரில் 4 பேரும், விபத்துக்களில் மரணமடைந்த 6 பேரில் ஒருவரும் என, சிறப்பு எஸ்.ஐ.க்கள் உயிரிழந்துள்ளனர். புற்றுநோயால் ஒருவரும், 4 பேர் தற்கொலையும், சந்தேக மரணத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இது காவல்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா மற்றும் பிற நோய் பாதிப்புகளில் உயிழந்தவர்களைப் பார்க்கும்போது, 55 வயதைக் கடந்த, ஓய்வு நாளை எட்டிய மற்றும் இணை நோய் பாதிப்புக்குள்ளான சிறப்பு எஸ்.ஐ.,க்களே அதிகமாக இடம் பெற்றுள்ளனர்.
58 வயதில் பணி ஓய்வு பெற்று, அதில் வரும் பணப்பலன்களை கொண்டு வீட்டுக்கடன் அடைத்தல், பிள்ளைகளுக்கு திருமணம் என்ற எதிர்கால திட்டத்துடன் காத்திருந்தவர்களுக்கு 2 ஆண்டு பணி நீடிப்பால் ஓய்வின்றி பணியை தொடர்ந்ததால் சிலர் கரோனா உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் வாரிசுகளுக்கு பணி வாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும், காவல்துறையில் உயிரிழப்பு மூலம் எண்ணிக்கை குறைவதோடு, ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காத சூழலும் உருவாகி இருக்கிறது.
தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயரதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.
காவல்துறையில் உரிய நேரத்தில் பணி ஓய்வு கொடுத்து, குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி காவல்துறையினர் உயிரிழப்பை தடுக்கவேண்டும். புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT