Published : 22 Jun 2021 03:52 PM
Last Updated : 22 Jun 2021 03:52 PM
அரசியல் சட்டத்திற்கு எதிரான, மாநில உரிமைகளுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான, கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரான, பொது சுகாதார சேவைகளுக்கு எதிரான - மொத்தத்தில் தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். காசி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
''2007 முதல் 2016 வரை, 9 வருடங்களில் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மருத்துவ மாணவர்கள் (85%), அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) எழுதி இடம் பிடித்த மாணவர்களுக்கு (15%) இணையாகக் கல்வித் தரத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் பட்டமேற்படிப்பு நுழைவுத் தேர்வுகளில் அதிக இடங்களைப் பெறுவதிலிருந்து இதை உறுதி செய்துகொள்ளலாம்.
· தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும், உயர்நிலை, மேல்நிலைப் பாடத்திட்டம் மற்றும் மருத்துவக் கல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குவதிலும் மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பாதித்துள்ளது.
· 'ஆயூஷ்' மற்றும் செவிலியர் படிப்புகளுக்கும், 'நீட்' தேர்வை நடைமுறைப்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் 'கார்ப்பரேட்' மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர் போன்றோரைத் தயார் செய்யும் அதே வேளையில், பொது சுகாதார மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் சீரழியும்.
· நாடு முழுவதும் ஒரே மாதிரியான கற்றல் சூழலும், பாடத்திட்டமும் இல்லாதபோது, ஒரே மாதிரியான தேர்வை ஏற்றுக் கொள்ள முடியாது.
· பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படும்போது, மாநிலக் கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் எப்படி நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்? நீட் தேர்வு சமநிலையில் இல்லாத இரு மாணவர்களுக்கிடையில் நடத்தப்படும் போட்டித் தேர்வாக இருக்கிறது.
I. நீட் தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் மட்டுமே MBBS படிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. கடந்த 4 வருடங்களாக நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்ட சேர்க்கையின் புள்ளிவிவரங்கள் அதைத்தவறு என்று நிரூபித்துள்ளன.
· 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டது. (85% இடங்கள்) மருத்துவப் படிப்பில் சேர உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 50%-க்கு குறைவாக எடுத்த மாணவர்கள் MBBS சேரமுடியாது. மேலும் 2016 வரை பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண்கள் (cut off marks) சராசரியாக 200-க்கு 180-க்கு மேல் இருந்திருக்கிறது. எனவே குறிப்பிட்ட 3 பாடங்களிலும் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) 180 மதிப்பெண்களுக்கு மேல் (அதாவது 90%) எடுப்பவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றனர்.
· ஆனால் 'நீட் தேர்வில்' 'Precentile' முறையில் குறைந்தபட்சம் 40 முதல் 50 Precentile மதிப்பெண் எடுப்பவர்கள் கூட MBBS சேரமுடியும். இதனால் பணம் இருந்தால் நீட் தேர்வில் 16% முதல் 25% மதிப்பெண் பெற்றவர்கள்கூட தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேரமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் 40% அல்லது 50% மதிப்பெண் பெறும் ஏழை மாணவன், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்குக் கேட்கப்படும் கட்டணத்தை செலுத்த முடியவில்லையென்றால் MBBS சேரமுடியாது. (தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடங்கள்: ரூ.10- 15 லட்சம் வரை, நிர்வாக இடங்கள் ரூ.20- 25 லட்சம்) இதைப் புரிந்துகொள்ள நீட் தேர்வு நடத்தப்படும் விதம் குறித்து விளங்கிக் கொள்ள வேண்டும்.
· நீட் தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்கள் (180 கேள்விகள் - ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள்'; தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழியும்) உயிரியல் பாடம் 360 மதிப்பெண்கள் / இயற்பியல் 180 மதிப்பெண்கள் / வேதியியல் 180 மதிப்பெண்கள் கடந்த 2018ல் கட் ஆஃப் (OC) 119 ஆக இருந்தது. 720க்கு 119 என்பது வெறும் 16.53 சதவீதம் தான். எனவே "மெரிட்" என்ற வாதம் முற்றிலும் அடிபட்டுப்போகிறது,
· மருத்துவம் பயிலத் தேவையான மூன்று பாடப்பிரிவுகளில், ஒன்று அல்லது இரண்டு பாடப்பிரிவுகளில் '0' மதிப்பெண் பெறுபவர் கூட நீட் தேர்வு முறையில், MBBS படிப்பில் சேருவதற்கு தகுதி பெற முடியும். உதாரணமாக உயிரியல் பாடத்தில் '0' மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவன் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் சேர்த்து 119க்கு மேல் வாங்கினால், ஒரு மருத்துவ சீட்டை விலைக்கு வாங்கமுடியும். அதுபோல, இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தில் '0' மதிப்பெண் பெற்றவர் கூட மருத்துவம் படிக்க முடியும்.
· தகுதியுள்ள மாணவர்களுக்குப் பண வசதி இல்லையென்றாலும் கூட மருத்துவ சீட் கிடைக்கவேண்டும். வணிக மயமாக்கப்பட்ட மருத்துவக் கல்வி சூழலில் இத்தகைய மாணவர்களுக்கு இடம் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று எந்த நோக்கத்திற்காக ரஞ்சித் ராய் சௌத்திரி கமிட்டியும், பாராளுமன்ற நிலைக்குழுவும், உச்ச நீதிமன்றமும், நுழைவுத் தேர்வைத் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகழகங்களில் மருத்துவச் சேர்க்கைக்கு வலியுறுத்தினார்களோ, அது நிறைவேறவில்லை. மாறாக நீட் தேர்வின் மூலம் மருத்துவ சீட்டுகள் வணிகமயமாவது (கேபிடேசன்) சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
· 'நீட் தேர்வில்' தகுதி பெற்றாலே (கட் ஆஃப் மார்க் வாங்கினாலே) 'தேர்ச்சி' என்று கூறுவதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனால் கிராமப்புற, ஏழை எளிய மற்றும் நடுத்தரவர்க்க மாணவர்கள் கட் ஆஃப் மார்க்கிற்கு மேல் நல்ல மதிப்பெண் பெற்றாலும், 'அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு' கிடைக்காதபோது தனியார் கட்டணக் கொள்ளைக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகிறது.
இத்தகைய மன அழுத்தமும், மன உளைச்சலும்தான் நீட் தொடர்பான தற்கொலைகளுக்கு' அடிப்படைக் காரணங்களாகின்றன.
II. PG - நீட் தேர்வின் பாதிப்பு (PG NEET)
· 1250-க்கும் மேற்பட்ட முதுகலை மருத்துவ இடங்களுடன் (MD.,M.S.,) தமிழ்நாடு அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. 2012-க்கு முன்பு வரை தமிழ்நாட்டில் இருந்த 15% இடங்களை மட்டுமே அகில இந்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கி வந்தனர். 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு பட்ட மேற்படிப்பு நீட் தேர்வினால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 50% இடங்களும், அகில இந்தியத் தொகுப்பிற்கு 50% இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. உயர்சிறப்பு மருத்துவப்படிப்புகளில் (SUPER SPECIALITY COURSES) 100 சதவீதமும் அகில இந்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படுகிறது. இதனால் தமிழக அரசு, தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டி எழுப்பிய சுகாதாரக் கட்டமைப்பைப் பயன்படுத்தி மற்ற மாநிலங்களிலிருந்து வரும் மருத்துவர்கள் பயன்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஓர் இடம்கூடக் கிடைக்காமல் போகலாம்.
· கடந்த சில வருடங்களாக, தமிழகத்தில் 'மேற்படிப்பு நீட் தேர்வு' நடைமுறைக்கு வந்த பின் MD.,M.S. போன்ற பட்ட மேற்படிப்பு இடங்களில் அரசு மருத்துவர்களுக்கான 50% ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால் அரசுப் பணியில் சேருவதற்கான ஆர்வம் இளம் மருத்துவர்களிடத்தில் குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் 50% இட ஒதுக்கீடு இருந்த காரணத்தால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்வேறு சிறப்பு மருத்துவர்களும், மருத்துவ ஆசிரியர்களும் (Medical Specialists & Medical Teachers) கிடைத்து வந்தார்கள். PG நீட் தேர்வு தொடர்ந்தால் வருங்காலத்தில் கிராம சுகாதார சேவைகளுக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் கிடைக்கமாட்டார்கள். தனியார் மருத்துவமனைக்கும் செல்ல முடியாமல் - அரசு மருத்துவமனைகளிலும் பயன்பெற முடியாமல் கிராமப்புற - ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாவர்கள்.
· தமிழகத்தில் தற்போது 25 அரசு மருத்துவக் கல்லூரிகளும் அதற்கு இணையான எண்ணிக்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. மேலும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் ஓரிரு ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். கடந்த ஐந்து ஆண்டுகளில் 'நீட் தேர்வு முறையில்' முதுகலை படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டதன் விளைவாக மருத்துவ ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, அரசு மருத்துவக் கல்லூரி/ மருத்துவமனைகளில் சுகாதாரப் பணிகளைப் பெருமளவு பாதிக்கும். நாளடைவில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற காரணம்கூறி, அரசு மற்றும் பொது சுகாதாரக் கட்டமைப்புகளும் தனியாருக்குத் தாரைவார்க்கப்படும். 'நீட்' தேர்வுகளின் அடிப்படை நோக்கமே பொது சுகாதாரக் கட்டமைப்பைத் தகர்த்து தனியார்மயத்தைப் புகுத்துவதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
· நீட் கோச்சிங்' ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின் தனியார் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் தோன்றின. பல லட்சங்களைச் செலவு செய்து பயிற்சி எடுத்தால் மட்டுமே 'நீட்' தேர்வில் நல்ல மதிபெண்கள் கிடைக்கும் என்ற நிலையில், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தன் 'பிள்ளைகள்' மீது, முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல் முறை தேர்வு பெறவில்லையென்றால், அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் முயற்சி செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் தேர்ச்சி பெறுவரில் 10% முதல் 20% மாணவர்கள் 'மீண்டும்' எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள். எனவே, நீட் பயிற்சிக்கு பிளஸ் 1-ல் தொடங்கி, மொத்தம் 2 முதல் 5 வருடங்களுக்குப் பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியதுள்ளது. இத்தகைய 'நிதி' ஆதாரங்கள் சாதாரண, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை' என்பதால், அத்தகைய மாணவர்களின் 'மருத்துவக் கனவு' வெறும் கனவாகவே கடந்து போகிறது. இவ்வாறு நீட் தேர்வு, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது.
எனவே, அரசியல் சட்டத்திற்கு எதிரான, மாநில உரிமைகளுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான, கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரான, பொது சுகாதார சேவைகளுக்கு எதிரான - மொத்தத்தில் தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும்''.
இவ்வாறு மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT