Last Updated : 22 Jun, 2021 03:37 PM

1  

Published : 22 Jun 2021 03:37 PM
Last Updated : 22 Jun 2021 03:37 PM

கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி

விருதுநகர்

கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வி.ராமராஜ் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 5 வயது சிறுவன், கர்ப்பிணி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்து சம்பந்தமாக தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள்

பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வி.ராமராஜ் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 வயது குழந்தை மட்டுமல்லாமல் 4 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 மாத குழந்தை வயிற்றில் இருந்தாலும் அதுவும் குழந்தைதான். எனவே, இரு குழந்தைகள் இறந்துள்ளன. இவ்விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் குழந்தைகள் காப்பகத்தைப் பார்வையிட்டு, விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்திருந்தாலும் இங்கு உள்ள குழந்தைகளுக்கும் சம வாய்ப்பும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. குற்றம் புரிவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

பள்ளி செல்லாததால் இடைநிற்றல் ஏற்பட்டு குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக மாறுகிறார்கள். இதோடு, குழந்தைத் திருமணங்களும் நடக்கின்றன.

சிறு வயதில் பிரசவிப்பதால் குழந்தைகளின் உடல்நலமும் பாதிக்கப்படுவதோடு மன அழுத்தமும் ஏற்படுகிறது. தேசிய குழந்தைகள் ஆணையமோ மற்ற மாநிலங்களில் உள்ள மாநில குழந்தைகள் ஆணையமோ இதுவரை அகதிகள் முகாமில் குழந்தைகளைப் பார்த்தது இல்லை நாட்டிலேயே முதன் முறையாக இலங்கை அகதிகள் முகாம்களில் ஆய்வைத் தொடங்கியுள்ளோம்.

இலங்கை அகதிகள் முகாமில் வசித்தாலும் அவர்களும் குழந்தைகள்தான். இங்கு குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை உரிமைகள் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்வதோடு, இங்கு உள்ள குழந்தைகள் பலருக்கு பிறப்புச் சான்றிதழ், குடியுரிமைச் சான்று இல்லை. எந்த குழந்தையும் நாடற்றவராக இருக்கக் கூடாது. குழந்தைக்கு குடியுரிமை என்பது பிறப்பு உரிமை.

ஆனால், முகாமில் உள்ள குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் பெறுவது சவாலாக உள்ளது. பிறப்புச் சான்றிதழ் பெற துணை தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

அதோடு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கிராம அளவில், வட்டார அளவில், நகராட்சி, பேரூராட்சி, வார்டு அளவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் சிறப்பாக செயல்பட சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். அதற்காக இக்குழுக்களுக்கு இளையோர் நீதிச் சட்டத்தில் கூடுதல் அதிகாரம் அளித்து சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x