Last Updated : 22 Jun, 2021 03:11 AM

 

Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

‘2026-ல் தமிழக முதல்வரே’- விஜய்யை வரவேற்று போஸ்டர்கள்: மதுரை ரசிகர்கள் உற்சாகம்

மதுரை சிம்மக்கல் பகுதியில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்.

மதுரை

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி (ஜூன் 22) மதுரை நகர், புறநகரில் ‘2026-ல் தமிழகத்தின் முதல்வரே' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என கடந்த 30 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், கடைசியில் உடல் நலத்தைக் காரணம் காட்டி அரசியலுக்கு வராமலேயே அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தார்.

நடிகர்களின் அரசியல் பிரவேச வரிசையில் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள நடிகர்விஜய், அரசியலுக்கு வரப்போவதாக ஊகங்கள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

நடிகர் விஜய்யை சில இயக்குநர்கள் அரசியலில் களம் இறக்க முயற்சிப்பதாகக் கூறப்பட்டது. இதையொட்டியே சமீப கால அவரது திரைப்படங்களில் அரசியல் வசனங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

கடந்த 2013-ல் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ‘தலைவா' படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனங்களால் சர்ச்சை கிளம்பி படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பினர் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்க்கார் ’ பட விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய விஜய், தான் முதல்வரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். மேல்மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் சரியாக இருந்தால் தவறே நடக்காது. யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தர்மம்தான் ஜெயிக்கும். ஆனா, கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். ஒரு நெருக்கடி ஏற்படும்போது நல்லவர்கள் பொதுவெளிக்கு வருவர் எனப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் சந்திரசேகர், விஜய் பெயரில் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க முயற்சித்தார். ஆனால், அதற்கு விஜய்தடை விதித்து இப்போது வேண்டாம் என முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இந்நிலையில், இன்று (ஜூன் 22) நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை நகர் தல்லாகுளம் மற்றும் புறநகர் பகுதிகளில் தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்களில், ‘2026-ல் தமிழகத்தின் முதல்வரே, இதயத் துடிப்பே, நீங்கள் அமர்ந்தால் நாற்காலியும் தோரணையாக..! அமர வேண்டிய நாற்காலியில் அமர்ந்தால் மக்களும் மகிழ்ச்சியாக’ என பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆர்வத்தை வெளிப்படுத்துவோம்

இதுகுறித்து மதுரை மாவட்டவிஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர் தங்கராஜ், தெற்கு மாவட்டஇளைஞரணித் தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் கூறியதாவது: 28 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம்.

இன்று அவரது பிறந்தநாளையொட்டி திலகர் திடல் காவல் நிலையத்துக்கு இலவச டிவி வழங்குகிறோம். அதிகாலை 12 மணிக்கு மேல் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளோம்.

விஜய் அரசியலுக்கு வருகிறாரோ, இல்லையோ எங்கள் ஆர்வத்தையும், விருப்பத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்போம். ரசிகர்களின் ஆர்வத்தை யாராலும் தடுக்க முடியாது. மாவட்ட, மாநில நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்த பிறகே பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x