Published : 21 Jun 2021 07:28 PM
Last Updated : 21 Jun 2021 07:28 PM

உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு சொந்த செலவில் உணவு வழங்கும் காவலர்: குவியும் பாராட்டு

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் ஆதரவற்றவர்களுக்கு தனது சொந்த செலவில் காவலர் ஒருவர் உணவு வழங்கி வழங்கி வரும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுரத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அளிக்கும் அன்னதானம் மற்றும் யாசகங்களை நம்பி ராமநாதசுவாமி திருக்கோயிலை சுற்றி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா தலங்கள் மற்றும் ஆன்மிக தளங்கள் மூடப்பட்டிருப்பதால் இவர்கள் உணவு கிடைக்காமல் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க ராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் முருகன் பொதுமக்களுக்கு நோய்த் தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஆதரவற்றோருக்கு தினந்தோறும் தனது சொந்தச் செலவில் உணவினை வழங்கி வருகின்றார்.

ஆதரவற்றோருக்கு தினசரி உணவுகளை முருகனின் மனைவி மற்றும் பிள்ளைகளை தயார் செய்து கொடுக்கின்றனர்.

தயாரான உணவுடன் முற்பகல் 12 மணிக்கு ராமேசுவரம் காவலர் குடியிருப்பிலிருந்து புறப்படும் தலைமைக் காவலர் முருகன் ராமேசுவரத்தில் திட்டக்குடி, நடுத்தெரு, மேலவாசல், வர்த்தகன் தெரு, 6 நம்பர் லையன், ரயில் நிலையம், வேர்க்கோடு, புதுரோடு, ராமேசுவரம் பேருந்திலிருந்து பாம்பன் பாலம் வரையிலும் உள்ள ஆதரவற்றவர்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 30க்கும் மேற்பட்ட உணவு பார்சல்களை தண்ணீருடன் வழங்குகிறார்.

ராமேசுவரத்தில் ஆதரவற்றவர்களுக்கு தனது சொந்த செலவில் மதிய உணவை தலைமைக் காவலர் கடந்த ஒரு மாதமாக வழங்கி வருவது பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x