Published : 21 Jun 2021 05:30 PM
Last Updated : 21 Jun 2021 05:30 PM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகம் இன்று 1000 மெட்ரிக் டன்னை கடந்தது. இதுவரை 1006 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் 23 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் 12-ம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடையில் 6 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மே 19-ம் தேதி முதல் மீண்டும் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யும் பணியையும் ஸ்டெர்லைட் நிறுவனம் இம்மாதம் 5-ம் தேதி தொடங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் 1000 மெட்ரிக் டன்னை நேற்று கடந்தது. இதனை முன்னிட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: 1000 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை வெற்றிகரமாக கடந்துள்ளோம்.
இன்று ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 16.5 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் இதுவரை 1006 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தவிர இதுவரை 712 வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள் (7.12 டன்) விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இங்கிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT