Published : 21 Jun 2021 04:47 PM
Last Updated : 21 Jun 2021 04:47 PM
ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், இலவச தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழ்நாட்டில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 17-ம் தேதி வரை மத்திய அரசிடம் இருந்து ஒரு கோடியே 18 லட்சத்து 17 ஆயிரத்து 690 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடியே 12 லட்சத்து 88 ஆயிரத்து 648 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகளில் 66 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT