Published : 21 Jun 2021 12:44 PM
Last Updated : 21 Jun 2021 12:44 PM

நீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு? ஆளுநர் உரையில் ஏன் இல்லை?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், தற்போது குழு அமைத்து அதன் பரிந்துரை அடிப்படியில் செயல்படுவோம். அதுவரை நீட் தேர்வு இருக்கும் என்கிறார்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்குப் பின் வெளியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

''சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்றனர். அதில் முக்கியமான வாக்குறுதிகள் கூட ஆளுநர் உரையில் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். சட்டப்பேரவையிலும் ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால், குழு ஒன்றை அமைத்துள்ளார்கள். நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளனர்.

அந்தக் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். ஆனால், அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பேசியது திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதே. ஆனால், அதைச் செய்யவில்லை. சில நாட்களுக்கு முன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்னும் நீட் தேர்வு முடிவுக்கு வரவில்லை. அதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

அப்படியானால் தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்கிற அளவில்தான் அவர்களது பேச்சு உள்ளது. தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை என்பதுதான் தற்போதுள்ள நிலை''.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x