Published : 21 Jun 2021 11:31 AM
Last Updated : 21 Jun 2021 11:31 AM
ஆளுநர் உரையின் முக்கிய அம்சமாக நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கோவிட் தொற்று காரணமாக கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் சபை நடக்கிறது. முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சபைக்கு முன்னரே முதல்வர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வந்துவிட, பின்னர் சபைக்கு வந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு வரவேற்று சபைக்குள் அழைத்து வந்தார்.
பின்னர் ஆளுநர், உரையை வாசித்தார். அதில் பல்வேறு சிறப்பம்சங்கள், அரசின் கொள்கை குறிப்புகள், எதிர்கால திட்டங்கள் இருந்தாலும் முக்கியமான ஒரு அறிவிப்பு அனைவரையும் கவர்ந்தது. அது இதுவரை எந்த தமிழக அரசும் செய்யாத, இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத ஒன்று என்றுகூட சொல்லலாம்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை அளிக்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்கிற அறிவிப்பே அது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் உரையில், “வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,
2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,
3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்,
4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,
5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர்.
இவர்கள் பணிப் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள். இந்த முயற்சி அரசியல் வரலாற்றில் முதல் முயற்சி என்பதாகப் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT